மசெக, மிகச் சிறப்பான கட்சியொன்றும் அல்ல என்றும் அவ்வாறு இருக்கையில் மிகச்சிறந்த சம்பளம் கோர வேண்டாம் என்றும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரில் அர்த்தமுள்ள வேட்பாளர் தேவை என்னும் உண்மையை ஏற்றுக்கொண்டு அதனை ஒப்புக்கொள்ளுங்கள்,” என்றும் மசெகவினரை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) நண்பகல் ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் பேசிய செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளரான திரு சீ, எம்ஆர்டி பழுது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான திருமணத்தைத் தாண்டிய உறவு, ரிடவுட் ரோடு பங்களா விவகாரம் எனக் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சர்ச்சைகளைப் பட்டியலிட்டார்.
சிங்கப்பூரில் நிகழ்ந்த $3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “இன்னும் பல்வேறு தவறுகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட முடியும். நீங்கள் அலுவலகம் செல்ல நேரமாகிவிடும்,” என்று சொன்னார்.
மேலும், “பிரதமர் லாரன்ஸ் வோங் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை அளித்துள்ளதாகத் தெரியவில்லை. தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அறிக்கை வெளிவந்த ஒரே மாதத்தில் தேர்தலை அறிவித்தது, அவர் அதே பழைய மசெக அணியின் மனப்பான்மையைக் கொண்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது,” என்றும் திரு சூ கூறினார்.
மசெக தொடங்கியபோது இருந்த முதல் தலைமுறைத் தலைவர்கள் திறன்மிக்கவர்களாகவும், செயலாற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர் என்றும் தற்போதைய அமைச்சர்களும் இளைய தலைவர்களும் அவ்வாறு இருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.