சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் செயல் கட்சி அதன் புதிய கிளைகளைத் திறக்க இருக்கிறது.
2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகும், சிங்கப்பூரர்களுடனான தனது தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள அந்நடவடிக்கையை அக்கட்சி மேற்கொள்கிறது.
பொங்கோல், தெம்பனிஸ், தெங்கா உட்பட குறைந்தது ஆறு இடங்களில் புதிய கிளைகள் திறக்கப்படுகின்றன.
மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டன.
இதை முன்னிட்டு தற்போது மக்கள் செயல் கட்சியின் அடித்தள உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படுகிறது.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 93லிருந்து 97ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் 87 தொகுதிகளைக் கைப்பற்றியது.
புதிய பொங்கோல் குழுத் தொகுதியில், மக்கள் சந்திப்புக் கூட்டத்தைத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தொடங்கிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சந்திப்புகள் புளோக் 402 நார்த்ஷோர் டிரைவில் நடத்தப்படுகின்றன.
அவ்விடத்தில் மசெகவின் புதிய கிளை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியிலும் புதிய கிளை திறக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரில் தஹா தெரிவித்தார்.
தாமும் முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீயும் தங்கள் கூட்டு மக்கள் சந்திப்புக் கூட்டத்தைப் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள புளோக் 216ல் நடத்தியதாக அவர் கூறினார்.
இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டு மக்கள் சந்திப்புக் கூட்டம் அங்கு நடைபெற்றது.
தெம்பனிஸ் குழுத் தொகுதியில் புதிதாக ஐந்தாவது பிரிவு உருவாக்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை தமது குழு செய்து வருவதாக முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் நியோ மே 8ஆம் தேதியன்று தெரிவித்தார்.
தேவையான உள்கட்டமைப்பு, செயல்முறைகள் ஆகியவை தயாராக சிறிது காலம் எடுக்கும் என்றார் அவர்.
புதிய பிரிவு தயாராகும் வரை தெம்பனிஸ் குழுத் தொகுதியில் உள்ள மற்ற நான்கு பிரிவுகளில் நடத்தப்படும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்குக் குடியிருப்பாளர்கள் செல்லலாம்.
அங் மோ கியோ குழுத் தொகுதிக்கு உட்பட்ட ஜாலான் காயு பிரிவு, சிலேத்தார்-சிராங்கூன் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.
இத்தகவலை அப்பிரிவுக்குத் தலைமை தாங்கும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜாஸ்மின் லாவ் வெளியிட்டார்.
அப்பிரிவின்கீழ் வரும் பகுதிகள் தொடர்பான விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.