மலேசிய வலையொளியில் பிரித்தமின் பங்கேற்பு குறித்து மசெக கேள்வி

2 mins read
f2e5d8b6-f8db-490a-ba10-f0258b75a3c0
பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (இடது) அண்மையில் மலேசிய அரசியல் வலையொளியான கெலுவார் செகிஜாப் அமர்வில் பங்கேற்றார். இதை திரு கைரி ஜமாலுதீன் (நடுவில்) மற்றும் திரு ஷாரில் ஹம்டான் ஆகியோர் தொகுத்து வழங்கினர். - படம்: கெலுவார் செகிஜாப் வலையொளி
multi-img1 of 2

உள்ளூர் அரசியல் குறித்த தனது கருத்துகளை மலேசிய வலையொளியுடன் பகிர்ந்துகொள்ள பாட்டாளிக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் முடிவு குறித்து ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் என்பது நாட்டின் எல்லைக்குள் நின்றுவிட வேண்டும். உள்நாட்டு விவகாரங்கள் சிங்கப்பூரர்களால் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என்று மசெக ஜூலை 3ஆம் தேதி ஓர் அறிக்கையில் கூறியது.

இதற்குப் பதிலளித்த பாட்டாளிக் கட்சி, “திரு சிங், அமைச்சரவை உறுப்பினராகவோ, அரசியல் பொறுப்புகளை ஏற்றுள்ளவராகவோ இல்லை. உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் அவரது பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்த சட்ட மரபும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

“அத்தகைய வழிகாட்டுதல் இருக்கும் என்றால், அது தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,” என்று பாட்டாளிக் கட்சி ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறியது. மசெக எதிர்ப்பதற்காகவே எதிர்க்கிறது,” என்று அது மேலும் கூறியது.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு சிங், முன்னாள் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், முன்னாள் அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷாரில் ஹம்டான் ஆகியோரால் நடத்தப்பட்ட பிரபலமான அரசியல் வலையொளியான கெலுவார் செகிஜாப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். திரு சிங் மலேசியாவிற்கு குடும்ப விடுமுறையில் சென்றபோது படமாக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மணி நேர அமர்வு ஜூன் 24 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.

நமது உள்நாட்டு அரசியல் நிலப்பரப்பு குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள திரு சிங், ஓர் உள்ளூர் அல்லாத ஊடக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் இது அவரது தேர்தலுக்குப் பிந்தைய மிக விரிவான நேர்காணலாகும் என்றும் மசெக தனது அறிக்கையில் தெரிவித்தது.

“பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர், வெளிநாட்டு மண்ணில் சிங்கப்பூரின் அரசியலைப் பற்றி வெளிநாட்டு பார்வையாளர்களிடம் பேசுவதை ஏன் தேர்வு செய்தார் என்பது குறித்து இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது,” என்றும் மசெக மேலும் கூறியது.

“சிங்கப்பூரின் எதிர்க்கட்சியினர் உண்மையுள்ளவர்களாக, நல்ல தேசபக்தியுள்ள சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முழுவதும் சென்று சிங்கப்பூரைக் குறைத்து பேசக் கூடாது,” என்று கூறிய முன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதி சியாம் சீ டோங்கை ஆளும் கட்சி மேற்கோள் காட்டியது.

திரு. சியாம் 1984 முதல் 2011 வரை பொத்தோங் பாசிர் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். அவர் சிங்கப்பூரின் மிக நீண்ட காலம் பணியாற்றிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர்.

சிங்கப்பூரில் இந்த வலையொளிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மசெக தலைவர்கள் வழக்கமாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்குவதாகவும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் அது மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்