தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசெக மாநாட்டில் தலைமைத்துவ புதுப்பிப்பு; லீ சியன் லூங் தலைமைப் பதவியை துறக்கலாம்: கவனிப்பாளர்கள்

3 mins read
490e66b5-f395-4e68-85bf-87017a6c6e5e
இந்த மாநாட்டில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (இடது) கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவார் என்றும் அவருக்கு பதிலாக பிரதமர் லாரன்ஸ் வோங் அப்பதவிக்கு தேர்வாவார் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். - படம்: ஸ்டெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சி தனது உயர்மட்டக் குழுவை புதுப்பிக்கும் பணியில் இவ்வார இறுதியில் இறங்கவுள்ளது.

இதன்மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24ஆம் தேதி) கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தனது 38 வது மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். ஆளும் மக்கள் செயல் கட்சி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாட்டில் கூடி இவ்வாறு தனது செயற்குழுவைத் தேர்வு செய்யும் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த மாநாட்டில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவார் என அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அவருக்கு பதிலாக பிரதமர் லாரன்ஸ் வோங் அப்பதவிக்கு தேர்வாவார் என்றும் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெறும் என்றும் அவர்கள் கூறகின்றனர். அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் மாநாடு நடந்த சில வாரங்களிலேயே நடப்பது மரபு என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மசெகவின் மத்திய செயற்குழுவுக்கு அரசுடன் நேரடித் தொடர்பு இல்லை என்றபோதிலும் அதில் உறுப்பினர்களாக இருக்கும் 12 பேர்தான் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடைபெற வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கு பொறுப்பு ஏற்பர்.

மக்கள் செயல் கட்சியின் கடந்தகால நடைமுறைப்படி கட்சியின் தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் ஒப்படைப்பதை இவ்வார இறுதியில் மூத்த அமைச்சர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரு லீ, 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தான் பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்த மூன்று மாதங்களுக்குப் பின், மசெகவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

அந்த ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டில் அப்போதைய மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து தான் விலகப்போவதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து, சில வாரங்கள் கழித்து டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங், கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்துக்குப் பின், தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் தற்பொழுது காலதாமதம் இன்றி பிரதமர் வோங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது

இவ்வார இறுதியில் நடைபெற உள்ள கட்சி மாநாடு மற்றொரு கோணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அது என்னவெனில் 38வது மத்திய செயற்குழுத் தலைவராகும் திரு லாரன்ஸ் வோங் அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குத் தலைமை தாங்கி களமிறங்குவார் என்பது. அந்த தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடைபெற வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி நடக்கும்பொழுது அதுவே சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபின் பிறந்த ஒருவர் தலைமையில் மக்கள் செயல் கட்சி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. பிரதமர் லாரன்ஸ் வோங் 1972ஆம் ஆண்டு பிறந்தவர்.

மக்கள் செயல் கட்சியின் 70ஆம் ஆண்டுநிறைவில் நடைபெறும் எதிர்வரும் மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இருவரும் உரையாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்