தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அல்ஜுனிட் குழுத் தொகுதியில் மூன்று கிளைத் தலைவர்களை மாற்றவிருக்கும் மசெக

2 mins read
229ec863-e692-431e-8e07-af1c335297e8
மக்கள் செயல் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதி கிளைத் தலைவர்களான (இடமிருந்து) திரு கென்னி சிம், திரு சம்சுல் கமார், திரு விக்டர் லாய் ஆகியோருக்குப் பதிலாக மற்றவர்கள் நியமிக்கப்படக்கூடும். - படங்கள்: மக்கள் செயல் கட்சி

மக்கள் செயல் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கான தனது ஐந்து கிளைத் தலைவர்களில் மூவரை மாற்ற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திரு கென்னி சிம், திரு ஷம்சுல் கமார், திரு விக்டர் லாய் ஆகியோருக்குப் பதிலாக மற்றவர்கள் கிளைத் தலைவராக நியமிக்கப்படக்கூடும்.

அல்ஜுனிட் குழுத் தொகுதி எதிர்க்கட்சியான பட்டாளிக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2015ஆம் ஆண்டிலும் 2020ஆம் ஆண்டிலும் திரு சம்சுலும் திரு லாயும் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் களமிறக்கப்பட்டனர்.

திரு சிம், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாய லேபார் கிளைத் தலைவராக நியமிக்கப்படடார்.

திரு சம்சுலுக்குப் பதிலாக டாக்டர் ஃபைசால் அப்துல் அசிசும் திரு சிம்மிற்குப் பதிலாக திரு டேனியல் லியூவும் நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு லாய் பொறுப்பு வகிக்கும் தொகுதியின் துணைக் கிளைத் தலைவராக டாக்டர் ஏட்ரியன் ஆங் இருக்கிறார்.

திரு லாய்க்குப் பதிலாக இவர் தலைவராக நியமிக்கப்படக்கூடும்.

அல்ஜுனிட் குழுத் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் மக்கள் செயல் கட்சி கிளைத் தலைவர்களை மாற்றுவது இதுவே இரண்டாவது முறையாகும்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களமிறங்கிய வழக்கறிஞர் அலெக்ஸ் இயோவுக்குப் பதிலாகத் திரு சிம் கிளைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் செயல் கட்சி அறிவித்தது.

அதே நேரத்தில், வங்கி அதிகாரியான சுவா எங் லியோங்கிற்குப் பதிலாக வர்த்தகத் தொழிற்சங்கவாதியான ஜகதீஸ்வரன் ராவ் கிளைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

திரு கென்னி சிம், திரு ஷம்சுல் கமார், திரு விக்டர் லாய் ஆகியோர் வேறு தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்களா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால் 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களில் திருவாட்டி சான் ஹுவி யுவைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதிய முகங்களாக இருப்பர்.

குறிப்புச் சொற்கள்