பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியை மக்கள் செயல் கட்சி (மசெக) தக்கவைத்துள்ளது.
மசெக அணி 66,137 வாக்குகளுடன் (75.21%) அபார வெற்றி பெற்றது. அதனை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் மக்கள் கட்சிக்கு (சிமக) 21,799 வாக்குகளே (24.79%) கிடைத்தன. பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் மொத்தம் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 87,936.
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தலைமையில் பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் களம் கண்ட மசெக அணியில் திரு சக்தியாண்டி சுபாட், புதுமுகங்களான எலிசா சென், சாய் யின்சாவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
“தொடர்ந்து பீஷான் - தோ பாயோ மக்களுக்குச் சேவையாற்ற கடுமையாக உழைத்து, உங்கள் கருத்துகளுக்குச் செவிசாய்த்து, அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம். பீஷான் - தோ பாயோவுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்,” என்று தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு திரு சீ நன்றி தெரிவித்தார். “நன்றி, நன்றி, நன்றி” என்று மும்முறை தமிழில் நன்றி கூறி தன் உரையை அவர் முடித்துக்கொண்டார்.
சிமக சார்பில் அதன் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா, திரு மெல்வின் சியூ, இரு புதுமுகங்களாக திரு முகம்மது நோர்ஹக்கிம், திரு லிம் ருய் சியான் ஆகியோர் போட்டியிட்டனர்.
முந்தைய மூன்று பொதுத் தேர்தல்களிலும் பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் போட்டியிட்டு சிமக தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
2020 பொதுத் தேர்தலில், மசெக அணி 67.23% வாக்குகளையும் சிமக 32.77% வாக்குகளையும் பெற்றிருந்தன.
இந்தப் பொதுத்தேர்தலிலும் மசெக வெற்றிபெற்றுள்ள நிலையில், அவ்வணியை வழிநடத்திய திரு சீ குறிப்பிட்டது போல அவர், ஓய்வுபெறும் வரை பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் சேவையாற்ற வாய்ப்பு உண்டு.
தொடர்புடைய செய்திகள்
மே 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் திரு சீ, தமது பிரசார உரையில் கூறியிருந்ததால், சொன்னபடி அன்றே அவர் மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

