தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘குட் பேட் அக்லி’ நேரங்களில் மசெக துணை நிற்கும்: டாக்டர் ஹமீது ரசாக்

1 mins read
271383d0-ec1b-4053-a9b0-c1e4eabe753c
ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹமீது ரசாக். வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி, பைனியர் தனித்தொகுதிக்கான மசெக வேட்பாளர்கள் மேடையில் உள்ளனர். - படம்: ரவி சிங்காரம்

ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘குட், பேட், அக்லி’ நேரங்களில் மக்கள் செயல் கட்சி துணை நிற்கும் என்று வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர் டாக்டர் ஹமீது ரசாக் கூறியுள்ளார்.

ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “வேட்புமனுத் தாக்கல் நாளன்று நான் எதார்த்தமாகப் பேசியபின் நான் ‘டிக்டாக்’கில் பிரபலமாகிவிட்டேன் என்று என் நண்பர் கூறினார். என்னை ‘சிங்கப்பூர் விஜய் என்று அழைக்கிறார்கள். அதனால், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டனர்,” என்று சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்கும் வகையில் அவர் நடித்த படங்களின் தலைப்புகளை அவர் தமது பேச்சிலும் பயன்படுத்திக்கொண்டார்.

“விசுவாசமும் விடாமுயற்சியும் நமது கட்சிக் கொள்கைகளில் அடங்கியுள்ளன. ‘குட், பேட், அக்லி’ நேரங்களின்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் மக்கள் செயல் கட்சி துணை நிற்கும்” என்றார் அவர். அதைக் கேட்டதும் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

மேலும், உடல்நலப் பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை ஒரு மருத்துவராகத் தான் கண்கூடாகப் பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“நம் சமூகம் ஒரு தனிமரம் கிடையாது. காடு போன்றது. அழகானது, அறிவானது, உயிரோட்டமானது. குடிமக்கள் அதனைச் செழிக்கச் செய்கின்றனர். ஒரு தனிமனிதர் முன்னேறும்போது, மற்றொருவரைத் தூக்கிவிடும்போது - அதுதான் உண்மையான வெற்றி. நாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்மை எதுவும் செய்ய முடியாது,” என்றார் டாக்டர் ரசாக்.

குறிப்புச் சொற்கள்