ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக), அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உத்தேச வேட்பாளர்களைத் தேடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் அவர்கள் முன்னதாகவே களத்தில் இறங்கி மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.
கட்சியில் புதிய வேட்பாளர்களைச் சேர்ப்பதற்கு ‘சில தேநீர் விருந்துகள் அல்லது நேர்முகத் தேர்வுகளை மட்டும் நம்பியிருக்க முடியாது’ என்பதை பல ஆண்டுகளாக கட்சி கற்றுக்கொண்டதாக பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தெரிவித்தார்.
வேட்பாளர்களை முன்னதாகவே களமிறக்குவது, அவர்கள் அனுபவமும் வெளிப்பாடும் பெற உதவும் என்றும் அதே நேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சேவையாற்ற அவர்கள் உண்மையிலேயே தயாராக இருக்கிறார்களா என்பதைக் கட்சியும் பொதுமக்களும் மதிப்பிட முடியும் என்றும் மசெக தலைமைச் செயலாளரான பிரதமர் வோங் கூறினார்.
அண்மைய தேர்தலில், கட்சி பல புதுமுகங்களை முன்னதாகவே களமிறக்கியது. ஆனால், அவர்களில் பலர் செயல்முறையின் ‘பிந்தைய கட்டத்தில்’ அறிமுகப்படுத்தப்பட்டனர் என்று பிரதமர் வோங் கூறினார்.
“இது நாங்கள் சிறப்பாகச் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய ஓர் அம்சம்,” என்றார் அவர்.
மே 3 தேர்தலில் களமிறக்கப்பட்ட பல புதிய வேட்பாளர்களைத் தனிப்பட்ட முறையில் தாம் அணுகி அவர்களைச் சம்மதிக்க வைத்ததாக பிரதமர் வோங் கூறினார். நம்பிக்கைக்குரிய நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சக எம்.பி.க்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
“கட்சித் தலைவராக, கட்சியில் சேர சிற்ந்தவர்களைத் தேடுவது எனது மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும். ஆனால், இந்த வேலையை நான் தனியாகச் செய்ய முடியாது, நீங்கள் அனைவரும் அதற்குப் பங்களிக்க வேண்டும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
ஓய்வுபெற்ற 20 எம்.பி.க்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பாராட்டு இரவு விருந்து உபசரிப்பின்போது அவர் பேசினார். தற்போதைய எம்.பி.க்கள், கட்சியின் கிளைத் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய 90 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சரியான பண்புநலன்களைக் கொண்ட, சிங்கப்பூரைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்ட, பொதுச் சேவையின் பெரும் பொறுப்பை ஏற்கக்கூடிய நபர்களைக் கட்சி தேடுவதாக பிரதமர் வோங் கூறினார்.
“இத்தகையோரைக் கண்டுபிடிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, இனியும் அது எளிதாக இராது,” என்று அவர் சொன்னார்.
“சிலர் அரசியலில் ஆர்வம் காட்டலாம், ஆனால் அவர்களின் நோக்கம் குறித்து எங்களுக்கு உறுதிபடத் தெரிந்திருருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேவை செய்ய மனம் இருக்கலாம், ஆனால் பொது வாழ்க்கையின் தேவைகளுக்கு அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்,” என்றார் அவர்.
2030க்குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன, கட்சி தனது தேநீர் விருந்துகளைத் தொடர்கிறது என்று பிரதமர் வோங் கூறினார். உத்தேச வேட்பாளர்கள் பொதுவாக கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பல சுற்று ‘தேநீர்’ சந்திப்புகளுக்குச் செல்வார்கள்.