ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி (மசெக) அணி வெற்றி பெற்றுள்ளது. கட்சி 58.76% வாக்குகளைப் பெற்றது.
பட்டாளிக் கட்சியின் திரு யீ ஜென் ஜோங் தலைமையிலான அணி, 41.24% வாக்குகளைப் பெற்றது.
1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்டார். அவரது தலைமையிலான அப்போதைய மசெக அணி 53.39 விழுக்காடு வாக்குகள் பெற்று ஈஸ்ட் கோஸ்டைப் பிடித்தது. பாட்டாளிக் கட்சி 23.67 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்தது.
திரு ஹெங் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் எட்வின் டோங் தலைமையிலான மசெக அணி இந்தப் பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட்டில் களமிறக்கப்பட்டது.
திரு ஹெங்குடன் கடந்த பொதுத்தேர்தலில் களமிறங்கிய பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மானும் திருவாட்டி ஷேரல் சானும் ஓய்வுபெறுவதாகத் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி தினேஷ் வாசு தாஸ், ஆலோசனை நிறுவனமான டெனியோவின் மூத்த துணைத் தலைவர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகிய புதுமுகங்கள் மசெக வேட்பாளர்களாக திரு டோங்குடன் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர்.
அவர்களுடன் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவும் திருவாட்டி ஜெசிக்கா டானும் இணைந்துகொண்டனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான மசெக அணி பிடோக் விளையாட்டரங்கில் ஆதரவாளர்களைச் சந்தித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 20 ஆண்டுகளாக ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசித்துவரும் பூஜா, 39, தான் எதிர்பார்த்ததைவிட பிடோக் விளையாட்டரங்கில் கூட்டம் அதிகமாக இருந்ததாகச் சொன்னார்.
“துணைப் பிரதமர் ஹெங்கின் இடத்தில் அமைச்சர் டோங் சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.

