எட்வின் டோங்கை வரவேற்கும் ஈஸ்ட் கோஸ்ட் மசெக குழு

2 mins read
7b125459-a358-4f90-abdc-faf6b31838e3
சனிக்கிழமை (மார்ச் 15) சீமெய் பிளாசா கடைத்தொகுதியில் துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் உட்பட ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி உலா சென்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங்கை மக்கள் செயல் கட்சியின் (மசெக) ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி அணி வரவேற்பதாக அக்குழுத்தொகுதிக்குத் தலைமை தாங்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கீயட் சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் கொண்டு வரப்படும் மாற்றம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் வரை அவருடன் தனது குழு இணைந்து செயல்படும் என்றார் திரு ஹெங்.

“குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்ய நாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அது எப்போதும் போல தொடரும். குடியிருப்பாளர்கள் எங்களுக்கு வாக்களித்து அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே எங்கள் இலக்கு,” என்று திரு ஹெங் கூறினார்.

தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று அதன் அறிக்கையை வெளியிட்டது.

சில குடியிருப்புப் பகுதிகளில் குடியிருப்பாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தொகுதி எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. சில புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன. திரு எட்வின் டோங்கின் ஜூ சியாட் தனித்தொகுதி ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

சனிக்கிழமை (மார்ச் 15) சீமெய் பிளாசா கடைத்தொகுதியில் திரு ஹெங் உட்பட ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி உலா சென்றனர்.

திருவாட்டி ஜெசிக்கா டானின் சாங்கி-சீமெய் தொகுதியில் சீமெய் பிளாசா கடைத்தொகுதி அமைந்துள்ளது.

தொகுதி உலாவில் அமைச்சர் டோங் கலந்துகொள்ளவில்லை. சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு டோங் ஹாங்காங்கிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ள புதிய குடியிருப்புப் பேட்டைகளின் குடியிருப்பாளர்களுடன் தமது குழு தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டதாக திரு ஹெங் தெரிவித்தார்.

அவர்களில் சாய் சீ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 20,000 குடியிருப்பாளர்களும் அடங்குவர்.

“குடியிருப்பாளர்களின் தேவைகளை அறிந்துகொள்வதும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியுடன் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம். ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியுடன் அவர்களையும் இணைத்துக்கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய குடியிருப்புப் பகுதியை உருவாக்குவதே எங்கள் இலக்கு,” என்று துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்