ஜிஎஸ்டி உயர்வு குறித்து மசெக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது: பிரதமர்

ஜிஎஸ்டி உயர்வு குறித்து மசெக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது: பிரதமர்

2 mins read
8be906a9-c06f-484d-af18-6e7541058fea
திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் நடந்த மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்டத்தில் பிரதமரும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி வேட்பாளருமான லாரன்ஸ் வோங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வைச் செயல்படுத்துவதில் மக்கள் செயல் கட்சி தலைமையிலான அரசாங்கம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதாகவும் வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் சிங்கப்பூரர்கள் 9 விழுக்காட்டிற்கும் குறைவாக ஜிஎஸ்டி செலுத்துவதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் நடந்த ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் மசெக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேசினார்.

“எதிர்க்கட்சியினர் ஜிஎஸ்டி பற்றி அதிகம் குறைகூறுகின்றனர். அதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் பலமுறை விளக்கியுள்ளேன். அவர்களின் திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் அவை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை,” என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

மக்களிடம் மசெகவைப் பற்றிக் குறைகூறி அதிக வாக்குகளைப் பெற எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் அவர் சாடினார்.

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளின் முக்கிய நோக்கமே வசதி குறைந்த குடும்பங்களும் நடுத்தர வருமான குடும்பங்களும் குறைவாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பதுதான் எனக் குறிப்பிட்ட பிரதமர் வோங், வெளிநாட்டவர்கள், சுற்றுப்பயணிகள், அதிக வருமான குடும்பங்கள்தான் முழுமையான 9% ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதாகவும் விளக்கினார்.

“விலைவாசி உயர்வால் ஏற்படும் அழுத்தத்திற்கு மசெகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றன. ஆனால், பணவீக்கம் உயர்வதற்கான காரணமே உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுதான் என்பதை அவர்கள் உணரவில்லை,” என்றார் திரு வோங்.

ஜிஎஸ்டியை உயர்த்தாமல் இருந்திருந்தால் பொது நிதி பலவீனமாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், வரவு செலவுத் திட்டத்தின்போது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆதரவு ஒருமுறையோடு நின்றுவிடாது என்றும் சொன்னார்.

அரசாங்கம் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் என்று உறுதியளித்த அவர், நெருக்கடியான சூழல்களில் மசெக சிங்கப்பூரர்களை பாதுகாப்பாக வழிநடத்தி செல்லும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் குறைந்தபட்ச சம்பளம் குறித்த பரிந்துரை பற்றிப் பேசிய திரு வோங், மசெகவும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு அதிக ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகச் சொன்னார்.

எதிர்க்கட்சியினரின் பரிந்துரைகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை எனக் குறிப்பிட்ட அவர், பொருளியல் நெருக்கடிச் சூழலிலும் சிங்கப்பூரர்களுக்கு தக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நம்பிக்கை அளித்தார்.

புதிய பட்டதாரிகளின் அச்சங்களை தீர்க்க அவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் என்று திரு வோங் கூறினார்.

ஏற்கெனவே முழு நேர வேலையில் இருப்பவர்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஒரு வேலையில் அமர அரசாங்கம் கைகொடுக்கும் என்ற பிரதமர் வோங், சிங்கப்பூரர் ஒவ்வொருவரையும் நன்கு பார்த்துக்கொள்வோம் என்றும் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்