சேவை, பராமரிப்புக் கட்டணம் கூடுகிறது

2 mins read
885a3a2c-4e93-4a16-b7c8-640c7e432647
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மக்கள் செயல் கட்சி நகர மன்றங்களின் கீழ் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், கடைகள், அலுவலகங்கள், சந்தைகள், உணவுக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கான மாதாந்தர சேவை, பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கவிருக்கிறது.

அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க இரண்டு முறை கட்டணம் உயர்த்தப் படுவதாக மசெக நகரமன்றங்கள் தெரிவித்தன.

வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். வீவக வீடுகளுக்கான மாதாந்தரக் கட்டணம் எழுபது காசு முதல் $7.90 வரை உயர்த்தப்படும்.

வணிகச் சொத்துகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்காரர்கள் சதுர மீட்டருக்கு ஒரு காசு முதல் 40 காசு வரை கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம். ஈரச்சந்தை, உணவுக்கடை களுக்கான கட்டணம் $2.20 முதல் $31.50 வரை அதிகரிக்கும்.

அடுத்த கட்டண உயர்வு அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது. அந்தச் சமயத்தில் வீவக வீடு களுக்கான கட்டணம் ஒரு வெள்ளியில் இருந்து $9.10 வரை அதிகரிக்கும்.

வணிகச் சொத்துகளுக்கான உரிமையாளர்கள், வாடகைக்காரர்களுக்கு சதுர மீட்டருக்கு இரண்டு காசு முதல் 41 காசு வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஈரச்சந்தை, உணவுக் கடைகளுக்கான கட்டண உயர்வு $2.20 முதல் $36.40 வரை இருக்கும்.

இந்த விவரங்களை நேற்று வெளியிட்ட மரீன் பரேட் நகர மன்றம், அதிகரிக்கப்பட வேண்டிய கட்டணத்தைவிட குறைவாகவே கட்டண உயர்வு இருக்கும் என்று கூறியது.

பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் சிறப்பு நிதியாதரவு வழங்கி வருகிறது. இதன் காரணமாக கட்டண உயர்வை குறைவாக வைத்திருக்க முடிகிறது. இந்த நிதியாதரவு மட்டும் இல்லையென்றால் வீவக வீட்டு உரிமையாளர்கள், வீட்டின் அளவுக்கு ஏற்ப மூன்று வெள்ளி முதல் $21.90 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மரின் பரேட் நகர மன்றம் தெரிவித்தது.

பராமரிப்புச் செலவுகள் மட்டுமல்லாமல் எரிசக்தி, மனிதவளச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகர மன்றங்கள் நெருக்கடியை எதிர்நோக்குவ தாகவும் துப்புரவு, பூச்சிக் கட்டுப்பாடு, நிலவனப்புச் சேவை போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியது.

இந்தக் கட்டண உயர்வால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீடமைப்புப் பேட்டை களின் பராமரிப்பு, மேம்பாடுகளுக்கு போது மான நிதி இருப்பது உறுதி செய்யப்படும்.

மக்கள் செயல் கட்சி நகரமன்றங் களுக்கான ஒருங்கிணைப்புத் தலைவர் லிம் பியாவ் சுவான், சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை யென்றால் 2023-2024 நிதியாண்டில் நகர மன்றங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும் என்று விளக்கினார்.

அண்மைய ஆண்டுகளாக திரட்டப்பட்ட உபரி நிதியைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் நீண்டகால பராமரிப்புச் செலவுகளுக்கான கையிருப்பு நிதியில் உபரி வருமானம் சேர்க்கப்படுவதை மரீன் பரேட் நகர மன்றத்தின் கீழ் உள்ள மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு லிம் நினைவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்