மசெக எந்தத் தொகுதியையும் விட்டுக்கொடுக்காது: மூத்த அமைச்சர் டியோ

2 mins read
932796b1-024d-4501-988e-409745613298
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியென் மக்கள் செயல் கட்சி அணியுடன் அல்ஜுனிட் குழுத்தொகுதி மக்களைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர் அனைவருக்கும் வாக்களிக்க ஒரு வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்ய சிங்கப்பூரின் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தொகுதி உலா சென்றபோது திரு டியோ அவ்வாறு சொன்னார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க மக்கள் செயல் கட்சி வலுவான இளைய அணியை அங்கு அனுப்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடாத மூத்த அமைச்சர் டியோ, பிடோக் புளோக் 538இல் உள்ள சந்தை, உணவங்காடி நிலையத்தில் மக்கள் செயல் கட்சி அணி மேற்கொண்ட தொகுதி உலாவில் இணைந்துகொண்டார்.

“சிங்கப்பூரின் ஒவ்வொரு தொகுதியிலும் நம்பகமான வேட்பாளர்களைக் களமிறக்குகிறோம். அதன் மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்க ஒரு வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்கிறோம். எந்தக் குழுத்தொகுதியையும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை,” என்றார் திரு டியோ.

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணியில் இரண்டாம் முறை வேட்பாளர் சான் ஹுவி யுவுடன் நான்கு புதுமுகங்கள் களமிறங்குகின்றன.

பல் மருத்துவர் ஃபைசல் அப்துல் அசிஸ், 37, நிறுவாக இயக்குநர் ஆடிரியன் அங், 42, நகரத் திட்டமிடல் ஆலோசனை நிறுவனத் தலைவர் டேனியல் லியு, 40, வர்த்தக தொழிற்சங்கவாதி ஜெகதீ‌ஷ்வரன் ராஜூ, 37 ஆகியோர் 48 வயது திரு யுவுடன் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் பாட்டாளிக் கட்சியின் திரு பிரித்தம் சிங், 48, திருவாட்டி சில்வியா லிம், 60, திரு ஜெரால்ட் கியம், 47, புதுமுகங்கள் கென்னத் டியொங், 36, ஃபட்லி ஃபெளசி, 44 ஆகியோரை எதிர்கொள்வர்.

மக்கள் செயல் கட்சி அணி புதிய நிபுணத்துவம், அனுபவம், ஆற்றல் ஆகியவற்றை இந்தத் தேர்தலில் கொண்டுவரும் என்று மூத்த அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

“இது ஒரு வலுவான அணி, புதிய அணி, நீங்கள் உங்கள் ஆதரவை அவர்களுக்குக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம். அவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து உங்களைப் பிரதிநிதிக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஆக்ககரமான யோசனைகளை முன்வைக்க விரும்புகிறார்கள். அதை செய்யவும் தயாராக உள்ளனர்,” என்று திரு டியோ வலியுறுத்தினார்.

ஏப்ரல் 18ஆம் தேதி நிலவரப்படி அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 144,298 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்