தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசெக தோற்றாலும் எல்லாவற்றிலும் ஓர் அங்கமாகவே இருக்கும்: டான் செங் போக்

3 mins read
b138539f-b40c-46d2-a529-a3ac7938197a
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி சிமுக வேட்பாளர்கள், ஜூரோங் வெஸ்ட்டில் புதன்கிழமை (ஏப்ரல் 30) காலை செய்தியாளர்களிடம் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு விலையைக் கட்டுப்படியாக வைத்திருக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் கேள்வி எழுப்பினார்.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மசெகவுக்கு எதிராகப் போட்டியிடும் அவர், புதன்கிழமை (30 ஏப்ரல்) காலை, செய்தியாளர்களிடம் பேசினார்.

“இதே குழுத்தொகுதியில் எங்களுக்கு எதிராகப் போட்டியிடும் தேசிய, வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஒரு நல்ல பதிலை அளிக்க வேண்டும்,” என்றார் திரு லியோங்.

அரசாங்கத்தின் விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம் பற்றிய தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியிடப்படவில்லை என்ற திரு லியோங், அத்திட்டம் சாத்தியமான தெரிவன்று என்றார்.

பழைய வீவக வீடுகளில் வசிப்போரின் குத்தகைக்காலம் குறைந்து வருவதைச் சுட்டிய அவர், அரசாங்கம் இதற்கு விரைவில் தீர்வு கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜூரோங் ஸ்பிரிங்கில் இருக்கும் சில வீவக புளோக்குகளின் மின்தூக்கிகள் மிகச் சிறிய அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லியோங், அமைச்சர் லீ இதைத் தீர்க்க என்ன திட்டங்கள் வைத்துள்ளார் எனும் கேள்வியையும் எழுப்பினார்.

சுகாதாரச் செலவுகளைக் குறைக்க வீட்டில் அடிப்படைப் பராமரிப்புச் சேவை வழங்குவது வழியமைக்கும் என்று சிமுக தலைவர் டான் செங் போக் பரிந்துரைத்தார்.

“சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் செலவு மிக்கது. மருத்துவமனைகளுடன் சேர்த்து, மற்ற வழிகளிலும் பராமரிப்புச் சேவைகளை வழங்க முற்பட வேண்டும். இது செலவைக் குறைக்கும்.

“சுகாதாரப் பராமரிப்பின் எதிர்காலம், வீடு சார்ந்த பராமரிப்புச் சேவையிலேயே உள்ளது. எம்.பி.யாகத் தேர்வுசெய்யப்பட்டால் இதைக் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன்,” என்றார் டாக்டர் டான்.

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றி எதிர்க்கட்சியினர் கூறும் தகவல் உண்மையன்று என உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் அண்மையில் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தது குறித்து தமிழ்முரசின் கேள்விக்கும் டாக்டர் டான் பதிலளித்தார்.

“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமைச்சர் சண்முகம் அவரது விருப்பத்திற்கு தவறான கருத்தைக் கூறியுள்ளார்,” என்றார் டாக்டர் டான்.

அதுகுறித்து பேசிய திரு லியோங், ஜிஎஸ்டி படிப்படியாகக் குறையும் வரி என்றும் வசதிகுறைந்த குடும்பங்கள் அரசாங்கத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும் நடுத்தர வருமானக் குடும்பங்கள் அதிக ஜிஎஸ்டி செலுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார்.

“ஜிஎஸ்டியை உயர்த்தினால் நடுத்தர வருமானக் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவர். மசெக அரசாங்கத்திற்குக் கூடுதல் வருவாய் தேவையில்லை. அரசாங்கத்திடம் கூடுதல் வளங்கள் இருந்தாலும், அது ஜிஎஸ்டியை உயர்த்தியுள்ளது,” என்று திரு லியோங் கருத்துரைத்தார்.

இதற்கிடையே, தேர்தலில் மசெக தோல்வி அடைந்தாலும் அக்கட்சியினர் அடித்தளத் தலைவராகவும் மக்கள் கழகத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சலுகை உள்ளதாகவும் சொன்ன டாக்டர் டான், இது தனித்துவமானது என்றார்.

“பல நாடுகளில் ஒரு கட்சி தோல்வி அடைந்தால் அது அப்படியே விலகிவிடும். ஆனால், சிங்கப்பூரில் மசெக ஏதோ ஒரு வகையில் அனைத்திலும் பங்கு வைத்திருக்கும். இதில் ஏதோ ஒன்று மறைக்கப்படுவதாக நான் நம்புகிறேன்.

“அரசாங்கத்திடமிருந்து மக்கள் கழகத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனால், மசெக தோல்வியுற்றாலும் அது எல்லாவற்றிலும் ஓர் அங்கமாகவே இருக்கும்,” என்று டாக்டர் டான் கூறினார்.

இந்நிலையில், மசெக-சிமுக தொண்டர்களுக்கு இடையே நிலவும் தகராறு விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என சிமுக துணைத் தலைவர் ஹேஸல் புவா கூறியுள்ளார்.

2025 ஜனவரியில் தொகுதி உலா ஒன்றின்போது மசெக தொண்டர் ஒருவரை சிமுக தொண்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி மசெக வேட்பாளர் லோ யென் லிங் கூறியதில் உண்மை இல்லை எனக் கூறிய திருவாட்டி புவா, இந்த விவகாரம் குறித்து காவல்துறையிடம் சிமுக புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு சிமுக தொகுதி உலா மேற்கொண்டது. தொகுதி உலாவின்போது வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் மசெக வேட்பாளர் ஆங் வெய் நெங்கும் தொகுதி உலா மேற்கொண்டிருந்தார்.

இருதரப்பு வேட்பாளர்களின் தொகுதி உலாவின்போது ‘பிஏபி! பிஎஸ்பி!’ என ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

டாக்டர் டானையும் திருவாட்டி புவாவையும் திரு ஆங் சந்திக்க நேர்ந்தது. அவ்விருவருடனும் அவர் கைகுலுக்கிக்கொண்டார்.

தொகுதி உலாவின்போது டாக்டர் டானையும் (நடுவில்) திருவாட்டி புவாவையும் திரு ஆங் சந்திக்க நேர்ந்தது. அவ்விருவருடனும் அவர் கைகுலுக்கிக்கொண்டார்.
தொகுதி உலாவின்போது டாக்டர் டானையும் (நடுவில்) திருவாட்டி புவாவையும் திரு ஆங் சந்திக்க நேர்ந்தது. அவ்விருவருடனும் அவர் கைகுலுக்கிக்கொண்டார். - படம்: சாவ் பாவ்
குறிப்புச் சொற்கள்