புதிய ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஷி யாவ் சுவென் 80.50% வாக்குகள் பெற்று வென்றார். அவர், ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர் கலா மாணிக்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டார்.
2020ஆம் ஆண்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தலைமையிலான ஐவர் அணியில் முதன்முறையாகத் தேர்தலில் களமிறங்கினார் திரு சுவென்.
இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் அறிமுகம் கண்ட ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் வெற்றிப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திரு சுவென் தக்கவைத்துக்கொண்டார்.
மனநலனைத் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகக் கருத வேண்டும் என்றும் மூத்தோர் பராமரிப்பு குறித்தும் பிரசாரக் கூட்டங்களில் அதிகம் பேசிய ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் திருவாட்டி கலா மாணிக்கம் 19.49% வாக்குகளைப் பெற்றார்.
பைனியர் தனித்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் துணைத் தலைமைச் செயலாளருமான திரு பேட்ரிக் டே 65.42% வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். இது அவர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல்.
2020ஆம் ஆண்டிலிருந்து பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத் தலைவராகவும் திரு டே பொறுப்பு வகிக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சுயேச்சை வேட்பாளர் ஆகியோருக்கிடையே நிலவிய மும்முனைப் போட்டியில் திரு டே 62% விழுக்காடு வாக்குகள் பெற்றார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் முதன்முறையாக பையனியர் தனித்தொகுதியில் போட்டியிட்ட திருவாட்டி ஸ்டெஃபனி டான், 34.58% வாக்குகளைப் பெற்றார்.