கெபுன் பாரு, மேரிமவுண்ட், இயோ சூ காங் தனித்தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி வெற்றி கண்டுள்ளது.
கெபுன் பாரு தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் ஹென்றி குவெக், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் டோனி டானுடன் மோதினார். ஹென்றி குவெக் 68.50 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டார்.
அவர், கடந்த 2020 தேர்தலில் புதிதாக மறுவரையரை செய்யப்பட்ட கெபுன் பாருவில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் குமரன் பிள்ளையை எதிர்த்துப் போட்டியிட்டு 62.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
மேரிமவுண்ட் தனித்தொகுதியில் போட்டியிட்ட மசெக வேட்பாளரும், கல்வி, மனிதவள துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், 70.70 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண் ஜெனரலான அவர், கடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு 55 விழுக்காடு வாக்குகள் பெற்றார்.
கடந்த தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட ஜெஃப்ரி கூ, இம்முறை மேரிமவுண்ட் தனித்தொகுதியில் 29.30 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளார்.
இயோ சூ காங் தனித்தொகுதியில் மசெக வேட்பாளர் யிப் ஹொன் வெங், சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் மைக்கேல் ஃபாங்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.
யிப் ஹொன் வெங் அத்தொகுதியில் 78.73 விழுக்காடு வாக்குகள் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளரை எதிர்த்து இதே தொகுதியில் 60.8 விழுக்காடு வாக்குகள் பெற்றார். அரசாங்க அதிகாரியான அவர், கடந்த 2020ஆம் ஆண்டு முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த அவர் அங் மோ கியோ நகர மன்றத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு ஃபாங் 21.27 விழுக்காடு வாக்குகள் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த தேர்தலில் ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மருத்துவரான திரு ஃபாங், 34.6 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தார்.