தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மசெகவின் புதிய முகம் தினேஷ் வாசு தாஸ்

2 mins read
7b57442b-766c-401f-884d-cbd958d0f0ca
பிடோக் புளோக் 58ல் உள்ள சந்தையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்த மக்கள் செயல் கட்சி வேட்பாளர் தினேஷ் வாசு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் பிடோக் தொகுதியில் அவருக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியின் புதிய முகமான தினேஷ் வாசு தாஸ் தீவிரப் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினார்.

மக்கள் செயல் கட்சியின் தலைவர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வேட்புமனுத் தாக்கல் தினத்திற்குப் பிறகு துணைப் பிரதமர் ஹெங், அவருடன் வீடு வீடாகச் சென்றும் சந்தைகளிலும் உள்ள குடியிருப்பாளர்களை தினேஷ் வாசுவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“அவர், நிறையச் செய்து வருகிறார்,” என்று அப்பர் சாங்கி ரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) உணவங்காடி நிலையங்களிலும் புளோக் 58ல் உள்ள சந்தையிலும் மக்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் தினேஷ் வாசு தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சில சவால்கள் இருந்தாலும் இதுவரை குடியிருப்பாளர்கள் தம்மை நல்ல முறையில் வரவேற்றுள்ளதாக அவர் கூறினார்.

“பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது,” என்றார் அவர்.

சில குடியிருப்பாளர்கள் நகராட்சி விவகாரங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் குறித்து அவரிடம் கவலை தெரிவித்தனர்.

“மூத்தோர் பலர் இத்தகைய பிரச்சினைகளால் கவலைப்படுகின்றனர். நமது மூத்தோர்களுக்கு இன்னும் அதிக உதவி செய்ய முடியும் என்று நம்புகிறேன். குறிப்பாக வேலையில் இல்லாதவர்கள் அல்லது போதுமான வருமானம் இல்லாதவர்களுக்கு அதிகம் உதவி செய்ய விரும்புகிறேன்,” என்று கூறிய அவர், “அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள் தற்போது நடப்பில் இருந்தாலும் விலைவாசி தொடர்ந்து அதிகரித்தால் இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

ஆங்கிலம் பேசாத குடியிருப்பாளர்களிடம் பேச மொழி ஒரு தடையாக இருக்குமா என்று கேட்டதற்கு, தமக்குச் சிறிதளவு மாண்டரின், ஹொக்கியன் தெரியும் என்பதால் அது ஓரளவு உதவுகிறது என்றார் அவர்.

“ஆனால் கொள்கை தொடர்பான உரையாடல்கள் சிரமம். அந்தச் சமயத்தில் கட்சித் தொண்டர்கள் உதவுகின்றனர்,” என்று வீடு வீடாகச் செல்லும்போது உதவும் தொண்டூழியர்களை அவர் சுட்டிக்காட்டினார்.

பிடோக்கில் திரு ஹெங் சுவீ கியட் மிகவும் வலுவான குழுவை உருவாக்கி வைத்துள்ளார். அந்தக் குழு தினேஷ் வாசுவுக்கு மொழிபெயர்த்து உரையாட உதவி வருகிறது.

இருந்தாலும் அனைத்துக் குடியிருப்பாளர்களும் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருவாட்டி டான் யிப் இங், துணைப் பிரதமர் ஹெங் இல்லாதது குறையாக இருப்பதாகவும் தினேஷைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகவும் கூறினார்.

“திரு ஹெங் எங்களைப் பார்க்க திரும்பி வருவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அந்த 78 வயது மூதாட்டி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்