தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள்: தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை

2 mins read
3718e90f-a3c4-4208-9c4f-32ffffcbfb0f
சிங்கப்பூரின் யிப் பின் சியு, ஆகஸ்ட் 29ஆம் தேதி பாரிசில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் எஸ்2 100 மீட்டர் மல்லாந்த பாணி நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றார். - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்
multi-img1 of 4

பாரிசில் நடைபெறும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு, எஸ்2 100 மீட்டர் மல்லாந்த பாணி நீச்சலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அவர் மெக்சிகோவின் ஹைடீ அசெவெசைத் தோற்கடித்து வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

இத்துடன், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அவர் ஆறாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

முதலில், பாரிஸ் போட்டியில் தாம் தோற்றுவிட்டதாகக் கருதினார் யிப். 32 வயதாகும் அவர் போட்டியை நிறைவுசெய்ய எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடங்கள் 21.73 வினாடிகள்.

“போட்டியை நிறைவுசெய்யும் விதமாக நீச்சல் குளத்தின் சுவரைத் தொட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தால் என் அருகில் மற்ற இருவரும் தொட்டதைப் பார்த்தேன். ‘ஐயோ, என்ன இது?’ என்று நினைத்தேன்,” என்றார் யிப்.

இருப்பினும், மெக்சிகோ வீராங்கனை அசெவெசைக் காட்டிலும் 0.06 வினாடிகள் முன்னதாக யிப் போட்டியை நிறைவுசெய்தது பின்னர் தெரியவந்தது.

இப்போட்டியில் மெக்சிகோ வெள்ளிப் பதக்கத்தையும் இத்தாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக எஸ்2 பிரிவில் 50 மீட்டர், 100 மீட்டர் என இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வெல்வது யிப்பின் இலக்கு.

முன்னதாக, 2016, 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு அவர் இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

50 மீட்டர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளைக் காண பாரிஸ் சென்றுள்ள கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், தமது ஃபேஸ்புக் பதிவில் யிப் பின் சியுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள யிப்பின் மீள்திறன், மனவுறுதி, வைராக்கியம் ஆகிய பண்புகளை அவர் தமது பதிவில் பாராட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்