தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெற்றோர் - பிள்ளைகள்: பராமரிப்பு எல்லைகளைப் பரிந்துரைக்கும் வழிகாட்டிக் குறிப்பேடு

2 mins read
306cab7a-19ef-42e0-8b63-54f683db07ed
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான எல்லைகள் குறித்த தெளிவான பரிந்துரைகள் இந்த வழிகாட்டிக் குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முதல் குறிப்பேடு இது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளைகளின் அன்றாடப் பராமரிப்பில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தமான எல்லைகள் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேட்டை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.

பிள்ளைப்பருவ மேம்பாட்டில் குடும்பங்களுக்கு உதவும் ‘கிட் ஸ்டார்ட்’ சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து அமைச்சு இந்த வழிகாட்டிக் குறிப்பேட்டைத் தயாரித்துள்ளது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களுக்கும் இடையிலான எல்லைக்கோடு சில நேரங்களில் தெளிவில்லாமல் போகக்கூடும்.

இத்தகைய சூழல்களில் பெற்றோர்க்கு இந்தக் குறிப்பேடு கைகொடுக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தானாகவே குளிக்குமளவு வளர்ந்த பிறகும் மகளைத் தந்தையோ மகனைத் தாயோ வழக்கமாகக் குளிக்க வைப்பது பொருத்தமற்ற நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குழந்தையின் சங்கடத்தைப் பொருட்படுத்தாது யாரிடமாவது உடல்ரீதியாகப் பாசம் காட்ட வலியுறுத்துவதும் தவறு. ஓரளவு வளர்ந்த பிள்ளைகளின் முன்னிலையில் பெற்றோர் ஆடை மாற்றுவதும் பொருத்தமற்ற நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உருவாக்கியுள்ள ‘குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான எல்லைகள்’ பற்றிய வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்தி, பாலர்பருவ மேம்பாடு, கல்வி, சமூகச் சேவை, சுகாதாரப் பராமரிப்புத் துறைகளைச் சேர்ந்தோர் பெற்றோர்க்குப் பயிற்சி அளிப்பர். குடும்பத்தில் ஆரோக்கியமான எல்லைகளையும் பழக்கங்களையும் வகுத்துக்கொள்ள இந்தப் பயிற்சி அவர்களுக்கு உதவும்.

நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய குடும்பக் கருத்தரங்கில் அமைச்சின் ஊழியர்கள் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த வழிகாட்டிக் குறிப்பேட்டில் ஆரோக்கியமான குடும்ப எல்லைகள் குறித்த தெளிவான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முதல் குறிப்பேடு இது என்று அவர்கள் கூறினர்.

கருத்தரங்கில் நவம்பர் 7ஆம் தேதி, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷவெலிங் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தார்.

குடும்பங்களுக்குள் பொருத்தமற்ற எல்லைகள் நீடித்தால் சில நேரங்களில் அது காலப்போக்கில் தவறான நடத்தையாக மாறக்கூடும் என்ற கவலையை முன்வைத்தார் அமைச்சின் சிறார் பாதுகாப்புச் சேவைப் பிரிவில் மூத்த, முதன்மை சமூகச் சேவகராகப் பணியாற்றும் யோகேஸ்வரி முனுசாமி.

எல்லைகள் தெளிவாக இல்லாவிட்டால், குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படும் சாத்தியம் உண்டு என்றார் அவர். எல்லைகள் மீறப்பட்டால் குழந்தைகள் குழப்பமும் மனஉளைச்சலும் அடைவர். அதன் விளைவாக அவர்களிடம் பொருத்தமற்ற நடத்தை காணப்படலாம் என்பதை ஆய்வுகள் காட்டுவதாக அவர் கூறினார்.

பிள்ளை வளர்ப்பு நடைமுறைகளும் குடும்பப் பழக்கவழக்கங்களும் தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த விவகாரங்களாகக் கருதப்பட்டாலும் பராமரிப்பாளர்களின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் உதவி இயக்குநர் நவல் ஆடம் கோயே கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகிட்ஸ்டார்ட்வழிகாட்டி நெறிமுறைசிறுவர்பெற்றோர்எல்லை