2023ல் புதிதாகப் பிறந்த சிங்கப்பூர்க் குடியுரிமை கொண்டுள்ள பிள்ளைகளில் கிட்டத்தட்ட கால்பங்கினர், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பல நாடு, பல இனக் குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளை நேர்காணல் செய்தது சீன மொழி நாளிதழான சாவ்பாவ். நேர்காணலில் அவர்கள், அனுபவங்களையும் அடையாளம் பற்றிய தங்கள் தேடுதலையும் விவரித்தனர்.
சிங்கப்பூர், கனடிய இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட டெபோ நிக்கல்சன், தன்னை உண்மையான சிங்கப்பூரராகப் பார்க்கிறார்.
ஆயினும், அவரது கலப்பின வெளித்தோற்றத்தால் அவருடைய வாழ்க்கை அனுபவம், அவரைச் சுற்றியுள்ள நண்பர்களைக் காட்டிலும் வேறுபடுகிறது. இதனால் தாம் தனித்தன்மை எய்துவதைக் காலப்போக்கில் உணர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
டெபோவைப் போன்ற இளையர்கள், 22 வயதில் ஏதேனும் ஒரு நாட்டின் குடியுரிமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சிங்கப்பூரின் சட்டம்.
தற்போது தேசியச் சேவையாற்றும் டெபோ, தேசியச் சேவையைத் தவிர்க்க விரும்பியதில்லை என்றும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தாம், இங்கேயே தங்க விரும்புவதாகவும் கூறினார்.
டெபோவின் தந்தை மார்க் நிக்கல்சன், கனடாவின் மோண்டிரியல் நகரைச் சேர்ந்தவர். அவரது தாயார் லியூ சூயின், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.
டெபோவும் அவரது தங்கை மாயாவும் சிங்கப்பூரிலுள்ள பாலர் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் பயின்றனர். உயர்நிலைப் பள்ளியின்போது அவர்கள் இருவரும் அனைத்துலகப் பள்ளிகளில் சேர்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
என் பிள்ளைகள் எனது வேர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினேன் என்றார் தாயார் லியூ சூயின்.
“அதனால்தான் தொடக்கத்தில் அவர்களை உள்ளூர்ப் பள்ளிகளில் சேர்த்து அவர்கள் தினமும் மாண்டரின் மொழியைக் கற்றதை உறுதிசெய்தேன். உயர்நிலைப் பள்ளிக்கான பருவத்தை அடைந்தபோது அவர்களது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பள்ளிகளுக்கு அனுப்பினேன்,” என்று அவர் கூறினார்.
அனைத்துலகப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்தபோது, தொடக்கத்தில் அவ்வளவு எளிதாக சக மாணவர்களுடன் பழக இயலவில்லை எனக் கூறினார் டெபோ.
“சிங்கப்பூரைப் பற்றி அனைத்துலகப் பள்ளிகளைச் சேர்ந்த என் நண்பர்கள் கொண்டுள்ள பார்வை, எனது பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. எனவே, அவர்களை என் உள்ளூர் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி சிங்கப்பூரில் சுமுகமாக இருப்பதற்கு உதவி செய்தேன்,” என்று அவர் கூறினார்.
சொந்த நாட்டினரே தம்மை வெளிநாட்டவர் எனத் தொடர்ந்து நினைப்பதால் ஏற்படும் நெருடல் இன்றும் இருப்பதாகக் கூறும் அவர், சூழலுக்கேற்பத் தாம் பேசும் விதத்தையும் மாற்றிக்கொள்கிறா.
“எனது தேசியச் சேவை நண்பர்களுடனும் உள்ளூர்ப் பள்ளி நண்பர்களுடனும் பேசும்போது மாண்டரின், மலாய் கலந்த ஆங்கிலத்தில் பேசுவேன். ஆனால், கனடிய உறவினர்களுடனும் அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடனும் பேசும்போது அவர்களுக்குப் பழக்கமான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சுத் தொனியைக் கையாள்வேன்,” என்று டெபோ கூறினார்.
சீன மரபைக் காப்பதில் உறுதி
பத்து வயது ஏரியலுக்கும் அவரது ஐந்து வயதுத் தங்கை ஐரிசுக்கும், குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் சங்கடம் இல்லை.
ஆனால் மூன்று இனங்களின் மரபு அவர்களது ரத்தத்தில் கலந்துள்ளதால் அந்தச் சிறுமிகளின் பிறப்புச் சான்றிதழில் இனத்திற்கான பிரிவை நிரப்புவது தாயார் ரோஸ்மேரிக்குச் சற்று சிக்கலானது.
மகள்கள் என்றும் சீன மரபை மறவாதிருக்க வேண்டும் என்பது இந்தத் தாயாரின் அழுத்தமான நிலைப்பாடாகும்.
சீன இனத்தையும் தமிழ் இனத்தையும் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ரோஸ்மேரி, நைஜீரியாவைச் சேர்ந்த திஜானி அடர்மோலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
2011 முதல் சிங்கப்பூர், கலப்பினத் திருமணம் செய்துகொண்ட பெற்றோரின் பிள்ளைகளது அடையாள அட்டையில் பெற்றோர் இருவரின் இனங்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு இனங்களையும் பதிவு செய்துகொண்ட பெற்றோரின் எண்ணிக்கை, 2014ல் இருந்த 12.9 விழுக்காடாக இருந்தது. 2023ல் அது 28.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
முன்னதாக, தந்தையின் இனத்தைப் பிள்ளைகள் தங்களது பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடவேண்டும். ரோஸ்மேரியின் இருவழி தாத்தாக்களுமே இந்தியர்களாக இருந்ததால் அவரது சான்றிதழில் இந்தியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ரோஸ்மேரி வளர்ந்த வீட்டில் யாரும் தமிழ் பேசவில்லை. அவர் பள்ளியில் மாண்டரின் மொழி பயின்று வளர்ந்ததால் தம் மகள்களும் அம்மொழியைப் பள்ளியில் பயில ஏற்பாடு செய்தார்.
அடர்ந்த, சுருள் நிறைந்த தலைமுடிகொண்டுள்ள அந்தச் சிறுமிகள் இருவரையும் நோக்கிச் சுடுசொற்களும் பாகுபாடும் அவ்வப்போது பாய்கின்றன. இருந்தபோதும், தங்கள் அடையாளம் பற்றி அவர்கள் வெட்கப்படக் கூடாது; மாறாகப் பெருமைப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார் தாயார் ரோஸ்மேரி.
தொடக்கப்பள்ளி நான்கில் தற்போது பயிலும் ஏரியலுக்கு அவ்வப்போது அடையாளம் சார்ந்த குழப்பங்கள் ஏற்படுகின்றன.
நான் மலாய் இனத்தவர் என்று என் வகுப்பினர் சிலர் கூறும்போது நான் சீனர் எனப் பதிலளிப்பேன், என்று ஏரியல் கூறுகிறார்

