தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் உட்கொள்பவர்கள் என்ற பெற்றோருக்குத் தெரியவந்ததும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் அதுகுறித்து தெரிவித்து அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்துக் காப்பாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“போதைப்பொருள் உட்கொள்ளும் இளையர்களை அவர்களது பெற்றோர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்போது அவர்களுக்குத் தங்கள் பெற்றோர் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால் போதைப்பொருள் பழக்கம் முற்றிப்போவதற்கு முன்பு அவர்கள் பிடிபட்டால் அந்த பழக்கத்திலிருந்து அவர்கள் விடுபடும் சாத்தியம் உள்ளது என்பதை அவர்கள் பிறகு உணர்வர்.,” என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உளவியல் பிரிவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் திருவாட்டி டியோ கா ஷுன் கூறினார்.
மீண்டும் போதைப்பொருள் உட்கொள்ளும் சாத்தியம் குறைவாக உள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட்டால், இளையர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை திட்டத்துக்கு முதல்முறை குற்றவாளிகள் தகுதி பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் பரிசோதனை நடத்தப்படுவதுடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை நடத்தப்படும்.
இந்தத் திட்டம் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும். மேலும் ஆறு மாதங்களுக்கு அது நீட்டிக்கப்படலாம்.
மீண்டும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் சாத்தியம் அதிகமுள்ளவர்கள், போதைப்பொருள் பழக்கத்தைத் தொடர்பவர்கள் ஆகியோர் போதைப் பித்தர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுவர்.
மறுவாழ்வு மையத்தின் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்குக் குற்றவியல் பதிவு இருக்காது.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் அவர்கள் மீண்டும் சமுதாயத்தில் எவ்வித இடையூறும் இன்றி இணையலாம் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், போதைப்பொருள் உட்கொள்ளும் இளையர்கள் தொடர்புடைய வழக்குகள் அதிகரித்திருப்பதாக உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசால் இப்ராகிம் கடந்த ஜூலை மாதம் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பாக 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 16 வயதுக்கும் குறைவான 16 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24ஆக இருந்தது.

