சிங்கப்பூரின் 15வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அப்போது மக்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளையும் எஸ்ஜி60க்குப் பிறகு சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றியும் உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடும்போது அதிபரின் உரை இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கவிருக்கிறார்.
கடந்த மே மாதம் பொதுத் தேர்தல் முடிவடைந்தது. அப்போது வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்பு, வீடு, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் வெகுவாகப் பேசப்பட்டன.
இப்பிரச்சினைகளை தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் உறுப்பினர்கள் விவாதிப்பர்கள் என கவனிப்பார்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் 60வது பிறந்தநாளை சிங்கப்பூர் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றியும் உறுப்பினர்கள் பேசுவார்கள் என நம்பப்படுகிறது.
அதிபர் என்ற பொறுப்பில் கடைசியாக 2023ல் அப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். அது, கொவிட்-19க்குப் பிறகு உலகில் சிங்கப்பூரின் இடத்தைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் உரைக்கு முன்பு 99 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களில் 87 பேர் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள். 12 பேர் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சி மட்டுமே எதிர்க்கட்சியாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு ஆண்ட்ரே லோ, திருவாட்டி எய்லின் சோங் ஆகியோர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், செப்டம்பர் 22 முதல் 26 வரை அதிபரின் உரை குறித்து விவாதிப்பார்கள்.

