நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்கைகளைக் கடுமையாக ஆராய்ந்து அவற்றில் இருக்கும் குற்றங்குறைகளைக் கூறவேண்டும் என்று நாடாளுமன்ற நாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சியா கியன் பெங் கூறியுள்ளார். அதேநேரம் அவர்கள் மாற்றுக்கருத்துகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் திரு சியா உரை நிகழ்த்தினார். மன்ற உறுப்பினர்கள் அவர்களின் உரைகள், கருத்துகள், கேள்விகள், பதில்கள் முதலியவற்றைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு சியா வலியுறுத்தினார்.
அவை குறைவான வார்த்தைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்றார் அவர். தேவையில்லாமல் சொன்ன கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஒரு முறை சொன்னாலே அது நாடாளுமன்ற விவாதங்களில் அதிகாரபூர்வமாகப் பதிவாகிவிடும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
2023ஆம் ஆண்டிலிருந்து மன்ற நாயகராக இருந்துவரும் திரு சியா, “விவாதங்களின்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கருத்துகளை ஏற்கலாம்; அதேபோன்று ஒப்புக்கொள்ளாதவற்றிலும் இணக்கம் காணலாம்,” என்று சொன்னார்.
பலரின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற திரு சியா, இது டிக்டாக் நேரலை அன்று என்பதையும் நாடாளுமன்றம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறினார்.
நீண்ட உரைகளில் கவனம் செலுத்துவது என்பது சக மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்று பொதுமக்களுக்கும் சிரமமான ஒன்று எனத் திரு சியா தெரிவித்தார். தமது உரையின் நீளமும் ஈராண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடக் கணிசமான அளவு குறைவு என்பதை அவர் சுட்டினார்.
நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டங்கள் சக சிங்கப்பூரர்களின் வாழ்வில் பல தலைமுறைகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளும்படி மன்ற உறுப்பினர்களைத் திரு சியா கேட்டுக்கொண்டார்.
மன்ற நாயகராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்ட திரு சியாவை அவைத் தலைவர் இந்திராணி ராஜா பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கியமான மாற்றம் நிகழும் வேளையில் மன்ற நாயகராய்த் திரு சியா செயல்படுவார் என்றார் அவர்.
உலகப் பொருளியல் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் நிலையில் 15ஆம் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டும், கொள்கைகளை விவாதிக்க வேண்டும், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வகுப்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார் குமாரி இந்திராணி ராஜா.