சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம்மின் பெரும்பான்மைப் பங்கை ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் பெறுவதற்கு வகைசெய்யும் உத்தேச ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காகக் காப்பீட்டுச் சட்டத்தைத் திருத்தும் அவசர மசோதா, புதன்கிழமை (அக்டோபர் 16) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம் வரும் காலங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள காப்புறுதி நிறுவனங்கள் தொடர்பான விண்ணப்பங்களில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் கருத்துகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் பரிசீலிக்க அனுமதி வழங்கப்படும்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஒரு நிறுவனமாக மாறியபோது இன்கம் கூட்டுறவு நிறுவனத்தின் சொத்துகளைப் பெற்ற என்டியுசி எண்டர்பிரைசுக்கு இது பொருந்தும். மேலும், கூட்டுறவு நிறுவனமான தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிறுவனம், 72.8 விழுக்காட்டு பங்குகளைக்கொண்ட அதன் பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது.
“நாங்கள் அவசரம் அடிப்படையில் திருத்தங்களைச் செய்கிறோம், ஏனென்றால் முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை இன்கமின் பங்குதாரர்களால் பரிசீலனையில் உள்ளது,” என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், பொதுநலன் கருதி அந்த விண்ணப்பத்தின் ஒப்புதலை நிறுத்திவைக்க இந்தத் திருத்தம் அனுமதிக்கும். மேல் முறையீட்டுக்கு வழி இருக்காது.
இதுபோன்ற வழக்குகளில், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் கருத்துகளைப் பரிசீலிக்க நிதி ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தற்போது காப்புறுதிச் சட்டத்தில் வழிவகை இல்லை.
இன்கம் தற்போது ஒரு பெருநிறுவனமாக இருப்பதால், கூட்டுறவு நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாது என்பதால் இந்த திருத்தம் முக்கியமானது.
திருத்தத்திற்கு முன்னர், திட்டமிட்ட ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் சிங்கப்பூர் நாணய ஆணையத்தை மட்டுமே சார்ந்திருந்தது. விண்ணப்பதாரரின் நிதி வலிமை, முன்னைய செயல்பாடுகள் போன்றவற்றைக் கணக்கில்கொண்டு அது பொருத்தமானதா, சரியானதா என்பது போன்ற அடிப்படையில் ஒரு விண்ணப்பத்தை மதிப்பிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இன்கமிற்கு ஒரு சமூக நோக்கம் உள்ளது. எனவே, கூட்டுறவுச் சங்கங்களை மேற்பார்வையிடும் அமைச்சரின் கருத்துகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கடந்த ஜூலை மாதத்தில், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் நிறுவனக் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து குறைந்தது 51 விழுக்காடு இன்கம் பங்குகளை $2.2 பில்லியனுக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அலியான்ஸ் தெரிவித்தது.
உத்தேச ஒப்பந்தம் பொது விமர்சனங்களைத் தூண்டியது. இது காப்புறுதிச் சந்தா அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும், குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் இன்கம்மின் ‘சமூக பணி’ அடிப்படைக்கு எதிரானது என்றும் சிங்கப்பூரர் பலர் கவலை தெரிவித்தனர்.