தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 பொதுத் தேர்தல்: மே 3 வாக்களிப்பு நாள்; ஏப்ரல் 23 வேட்புமனுத் தாக்கல் தினம்

3 mins read
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
a9ff782c-a247-4b69-b277-16820f54258c
புளோக் 307 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் வாக்களிப்பு நிலையம். - கோப்புப் படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

சிங்கப்பூர் அதன் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறையை முறையாகத் தொடங்கிவைக்கும் வகையில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

வேட்புமனுத் தாக்கல் தினம் புதன்கிழமை, ஏப்ரல் 23ஆம் தேதி இடம்பெறும் எனப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சனிக்கிழமை, மே 3ஆம் தேதி வாக்களிப்பு நாள் இடம்பெறும். அது தொடர்பில் தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்பது வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமராகவும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளராகவும் உள்ள திரு லாரன்ஸ் வோங்கின் முதல் பொதுத் தேர்தலாக இது விளங்குகிறது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அதன் 14வது தேர்தலான இதில், 33 தனி மற்றும் குழுத் தொகுதிகளில் 97 நாடாளுமன்ற இடங்களுக்காக மசெக போட்டியிடும். அநேகமாக அவை அனைத்திலும் எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு ஹான் கோக் ஜுவான் நியமிக்கப்பட்டுள்ளார். 2020 பொதுத் தேர்தலில் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பதவி வகித்த திரு டான் மெங் டுயிக்குப் பதிலாக திரு ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மசெக, 30க்கும் மேற்பட்ட புதுமுகங்களை நிறுத்தும் என்று பிரதமர் வோங் அண்மையில் அறிவித்திருந்தார். இது அண்மைய ஆண்டுகளில் அதன் மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்டுப்பாடுகள், நாடாளுமன்றத்தில் அதிக மாற்றுக் குரல்கள் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகளிடமிருந்து மற்றொரு கடுமையான போட்டியை ஆளும் கட்சி எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2020ல், மசெக 61.23 விழுக்காட்டு வாக்குகளுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அது இரண்டாவது குழுத்தொகுதியை, அதாவது செங்காங் குழுத்தொகுதியைப் பாட்டாளிக் கட்சியிடம் இழந்தது. அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இம்முறை நாட்டின் கிழக்குப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல பாட்டாளிக் கட்சி முற்படும். ஹவ்காங்கில் உள்ள ஒரு தொகுதியையும் அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகளில் உள்ள ஒன்பது இடங்களையும் தக்கவைத்துக்கொள்வதோடு, அக்கட்சி புதிய பொங்கோல் குழுத்தொகுதி உட்பட மேலும் ஐந்து தொகுதிகளில் போட்டியிடத் தயாராக உள்ளது.

மேற்கில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி குறைந்தது ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் எனக் கருதப்படுகிறது. அதன் முதல்நிலை அணி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 தேர்தலில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமான டாக்டர் டான் செங் போக் தலைமையிலான அணி, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் 48.32 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. இது மசெகவின் மிகக் குறுகிய வெற்றியாகும்.

இதற்கிடையே, வாக்களிப்பு நாளான மே மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை, பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு ஏப்ரல் 15ஆம் தேதி மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தேர்தல் குறித்து மேல்விவரங்களைப் பெற https://www.tamilmurasu.com.sg/general-election-2025

குறிப்புச் சொற்கள்