‘வேலைகளற்ற வளர்ச்சி’ தீர்மானம்: மனிதவள அமைச்சர் ஆதரவு

‘வேலைகளற்ற வளர்ச்சி’ தீர்மானம்: மனிதவள அமைச்சர் ஆதரவு

2 mins read
686754d1-c555-4209-ae40-5c7cd54c8900
அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்கம் நிச்சயமாக ஆதரவளிக்கும் என்றார் மனிதவள அமைச்சர் டான் சீ லெங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு ஆணையம்
Google News Preferred Icon

சிங்கப்பூர், ஊழியர்களுக்கு இன்னும் தெளிவான முறையில் வழிகாட்ட உள்ளூர் வேலைச் சந்தை நுண்ணறிவை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் பொருளியலில் எந்த வேலைகள் உருமாறும், எந்த வேலைகள் காணாமற்போகும், ஊழியர்களுக்கு எத்தகைய திறன்கள் தேவை ஆகியவை குறித்து வேலைச் சந்தை நுண்ணறிவு வழிகாட்டும்.

புதன்கிழமை (மே 6) நாடாளுமன்றத்தில் உறையாற்றிய டாக்டர் டான், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் வேலைச் சந்தை நுண்ணறிவு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த கருத்துகளை அங்கீகரிப்பதாகக் கூறினார்.

நம்பிக்கையின் அடித்தளத்தில் அந்த நுண்ணறிவு கட்டப்படவேண்டும் என்றும் முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றவேண்டும் என்றும் டாக்டர் டான் கூறினார்.

திரு இங், ‘வேலைகளற்ற வளர்ச்சி’ என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 5) தாக்கல் செய்து பேசினார்.

திரு இங்கின் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கான ஆதரவை உறுதிப்படுத்திய டாக்டர் டான், புதிதாக அமைக்கப்படும் திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு ஊழியர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவருவதால் சிங்கப்பூர் ஊழியர்கள் தயாராக இருக்கவேண்டும் என்ற டாக்டர் டான், வேலைகளில் அவற்றின் தாக்கம் அதிகமாகலாம் என்றார்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து திரு இங் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பரிந்துரைகளையும் டாக்டர் டான் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 3,800க்கும் அதிகமான நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் மூலம் 300,000 ஊழியர்கள் பயனடைந்தனர் என்றும் திரு இங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் திட்டத்தை முத்தரப்பு அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று டாக்டர் டான் கூறினார்.

“அரசாங்கத்தால் அனைத்து வேலைகளையும் பாதுகாக்க முடியாது. ஆனால் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதரவளிப்பதில் அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் அது செய்யும்,” என்று டாக்டர் டான் வாக்குறுதி அளித்தார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலைத் தேடுவோர் ஆதரவுத் திட்டத்துக்கான வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்த பரிந்துரையைத் திரு இங்கும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டேயும் முன்வைத்தனர்.

அதுகுறித்து அரசாங்கம் ஆராயும் என்றும் டாக்டர் டான் சொன்னார்.

2025ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம், ஆட்குறைப்பு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் $5,000 அல்லது அதற்கும் குறைவான மாதச் சம்பளத்தைப் பெற்றால் ஆறு மாதங்களுக்கு $6,000 வரையிலான உதவித் தொகையைப் பெறுவர்.

அதைவிடக் கூடுதல் சம்பளம் பெறும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆட்குறைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கும் அதே பாதிப்புகள் ஏற்படும் என்றும் உதவி தேவைப்படும் என்றும் திரு இங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
புதிய வேலைகள்நாடாளுமன்றம்மனிதவள அமைச்சு