மத்திய கிழக்கு மோதல்களால் சிங்கப்பூரர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைச் சமாளிக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி சிங்கப்பூர் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) விவாதிக்க உள்ளது.
மூன்று அமைச்சர்கள் அதுகுறித்துப் பேச உள்ளனர்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை, தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், போக்குவரத்து தற்காலிக அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வெளியிடப்பட்டது.
போரின் தாக்கத்தால் சிங்கப்பூரில் எரிசக்தி விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 62 கேள்விகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் உள்ள திரவ இயற்கை எரிவாயு நிலையங்களில் ஏற்பட்ட இடையூறுகளால் சிங்கப்பூர்க் குடும்பச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு என்ன என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கேட்க இருக்கும் வினாவும் நிகழ்ச்சிநிரலில் உள்ளது.
எரிசக்தி விநியோகத்தில் இடையூறு நேர்ந்தாலோ நீண்டகாலத்திற்கு எரிசக்தி விலைகள் ஏற்றம் கண்டாலோ அவற்றைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் அவசரகாலத் திட்டங்களின் வரம்பு குறித்தும் திரு சிங் கேட்க உள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்படும் தொழில் நிறுவனங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்புகளுக்கு உதவ அரசாங்கம் எவ்வாறு முன்வரும் என்பது குறித்த கேள்விகளையும் எம்.பி.க்கள் எழுப்ப உள்ளனர்.
அவர்கள் தவிர, போரின் தாக்கத்தில் உணவு விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து போ லி சான் (செம்பவாங் வெஸ்ட்), கென்னத் தியோங் (அல்ஜுனிட் குழுத்தொகுதி) போன்றோர் உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கு மோதல் நீண்டகாலத்துக்கு நீடித்தால் அரசாங்கம் தனது கையிருப்பு மற்றும் உணவு இறக்குமதியில் பன்முகத்தன்மை உத்தியை மேம்படுத்துமா என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.

