பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டது, கட்சித் தலைவர்கள் சில்வியா லிம், ஃபைஷால் மனாப் ஆகியோர்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். அதுகுறித்து எதிர்வரும் அமர்வில் கலந்துரையாடப்படும் என்றார் அவர்.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன விவகாரத்தில் திரு சிங், திருவாட்டி லிம், திரு மனாப் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக 2022ஆம் ஆண்டு சிறப்புரிமைக் குழு அறிக்கை வெளியிட்டது. அதை மூன்று உறுப்பினர்களும் மறுத்தனர்.
அதன் விளைவாக நாடாளுமன்றம் பொய் விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டது என்று குமாரி இந்திராணி சொன்னார்.
தற்போது திரு சிங்கின் வழக்கு முடிவடைந்து அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அந்த விவகாரம் ஜனவரி அமர்வின்போது மீண்டும் எழுப்பப்படும் என்றார் அவர்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்புரிமைக் குழுவின் முடிவை உறுதிப்படுத்துகிறது,” என்று குமாரி இந்திராணி கூறினார்.
நாடாளுமன்றத்தில் கூறிய பொய்யைத் தொடரும்படி திரு சிங், திருவாட்டி லிம், திரு ஃபைஷால் ஆகிய மூவரும் திருவாட்டி கானிடம் சொல்லியிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அது பொருத்தமற்ற செயல் என்று சிறப்புரிமைக் குழு குறிப்பிட்டது. அது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் குழு சுட்டியது.
சிறப்புரிமைக் குழுவிடம் திரு சிங் பொய் சொன்னது நிரூபனமானது தொடர்பில் நாடாளுமன்றம் தகுந்த நடவடிக்கை குறித்து கலந்துரையாடும் என்று குமாரி இந்திராணி இம்மாதம் 17ஆம் தேதி கூறியிருந்தார்.
திருவாட்டி லிம்மும் திரு ஃபைஷாலும் சத்தியப் பிரமாணத்தை எடுத்த பிறகும் பொய் சொன்னதாகச் சிறப்புரிமை குழு சொன்னது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் கூட்டத்தில் உண்மையை மறைக்கும்படி திருவாட்டி கானிடம் அவர்கள் கூறியதை மறுத்ததை குழு சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
குமாரி இந்திராணியின் கருத்துகள் குறித்து அறிந்திருப்பதாகச் சொன்ன பாட்டாளிக் கட்சி தகுந்த காலத்தில் அந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றது.
நாடாளுமன்றத்தில் நடக்காத சம்பவம் ஒன்றை நடந்ததுபோல பொய் சொன்னதற்காக 2021 நவம்பரில் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கான் கட்சியிலிருந்து விலகினார்.
அதே ஆண்டு திருவாட்டி கான், திரு சிங், திருவாட்டி லிம், திரு ஃபைஷால் ஆகியோரை விசாரித்த சிறப்புரிமைக் குழு, திருவாட்டி கானுக்கு அபராதம் விதிக்கும்படியும் திரு சிங்மீது வழக்குத் தொடுக்கும்படியும் பரிந்துரைத்தது.

