அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பொறுப்பில் உள்ளோரின் சம்பளத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பான பரிந்துரைகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் இது தொடர்பாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பொறுப்பில் உள்ளோரின் சம்பளத்தை மறுஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் அளிக்கும் பதிலை அவ்விருவரும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள். பின்னர், அதன் மீதான விவாதம் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நடைபெறும்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் சிங்கப்பூரின் பொருளியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துத் தெளிவு கிடைக்கும்வரை, அரசியல் பொறுப்பில் உள்ளோரின் சம்பளப் பரிந்துரைகள் மீதான பரிசீலனையை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்து நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது அதுபற்றிப் பேசப்படுகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு மோதல் காரணமாகப் பொருளியலில் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட்டு, சிங்கப்பூரின் எதிர்காலப் பொருளியல் நிலவரத்தில் தெளிவற்ற நிலை உருவானதாக அமைச்சர் சான் சுன் சிங் கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார்.
மறுஆய்வுக் குழுவின் அறிக்கையும் அரசாங்கத்தின் பதிலும் உரிய நேரத்தில் பகிரப்படும் என்றும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயனுள்ள முறையில் விவாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக இவ்வாண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.
சிங்கப்பூரில் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
உலகளாவிய சீரற்ற சூழல் காரணமாக அரசியல் பொறுப்பில் உள்ளோரின் சம்பள மறுஆய்வு தள்ளிப்போடப்பட்டது அண்மைய ஆண்டுகளில் இது இரண்டாவது முறை.
மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் வெடித்த மோதல்களால் உருவான புவிசார் அரசியல் சூழல், அரசியல் போட்டிகள், நிச்சயமற்ற உலகப் பொருளியல் நிலை போன்ற அழுத்தம் மிகுந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் 2023ஆம் ஆண்டிலும் இந்த மறுஆய்வை அரசாங்கம் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


