ஃபேரர் பார்க் வீட்டுக் கூரைப்பகுதி சரிந்து விழுந்ததால் 10 மணிநேரம் சாலை மூடல்

ஃபேரர் பார்க் வீட்டுக் கூரைப்பகுதி சரிந்து விழுந்ததால் 10 மணிநேரம் சாலை மூடல்

1 mins read
99ff2b1b-1461-45e5-a75e-b893de833ba9
கட்டடம் பாதுகாப்பான நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். - படங்கள்: ஷின் மின் டெய்லி நியூஸ்

ஃபேரர் பார்க் வட்டாரத்தில் ஒரு வீட்டின் கூரைப்பகுதி, மோட்டார்சைக்கிள் ஒன்றின் மீது சரிந்து விழுந்து கடும் சேதத்தை விளைவித்துள்ளது.

மோட்டார்சைக்கிளின் இருக்கை இரண்டாகப் பிளந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரங்கூன் ரோடு, டோர்செட் ரோடு சாலைச் சந்திப்பில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில், இச்சம்பவம் ஜூலை 19ஆம் தேதி நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள சில சாலைகள் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டடத்திலிருந்து 30 மீட்டர் தூரம் வரையிலான சாலைகளைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடினர்.

இந்தச் சாலை மூடலால் அப்பகுதியிலுள்ள சில கடைகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐந்து மாடிக் கட்டடத்தின் கூரைப்பகுதி காலை 10 மணியளவில் சரிந்து விழுந்ததில் யாருக்கும் காயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நடைபாதையில் யாரேனும் இருந்திருந்தால் அந்தக் கூரைப்பகுதி அவர்கள் மீது விழுந்து அவர்கள் உயிர்பிழைத்திருக்க முடியாது என்று சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் குறிப்பிட்டார்.

கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஊழியர்கள் சிலர் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

சேதமடைந்த மோட்டார்சைக்கிளின் என்ஜினை இயக்க முடியவில்லை என்று அதன் 53 வயது உரிமையாளர் குறிப்பிட்டார்.

மோட்டார்சைக்கிளை வேறொருவரிடமிருந்து $18,000க்கு வாங்கி ஏழு மாதங்கள்தான் ஆகின்றன என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்