ஹாலந்து பிளேய்னில் அருகி வரும் ஆர்க்கிட்டுக்கான பாதுகாப்பிடம்

3 mins read
981cf75e-8d9e-4cd0-9a0b-93f535c5789c
அரிய வகை ஆர்க்கிட் மலரான ஸ்‌ட்ராகலி ரஷ் ஆர்க்கிட் (Straggly rush orchid) பிந்தானில் எடுக்கப்பட்ட படம். - படம்: லா பிரதர்ஸ்

புதிய குடியிருப்பு மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹாலந்து பிளேய்ன் பகுதியில் ஒரு பகுதி பசுமைப் பாதுகாப்பிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் சிங்கப்பூரில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஓர் ஆர்க்கிட் மலர் மற்றும் சில அரிய வகைத் தாவரங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தனியார் வீட்டு வளாகத்திற்கான திட்டங்களைத் திருத்தி உள்ளனர்.

ஸ்‌ட்ராகலி ரஷ் ஆர்க்கிட் (Straggly rush orchid) எனப்படும் அந்த ஆர்க்கிட் மலர்களைப் பாதுகாக்க சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்டுள்ள இரு இடங்களில் ஹாலந்து பிளேய்ன் ஒன்றாகும். அந்த ஆர்க்கிட் 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டறியப்படாமல் இருந்தது. 2007ல் மெக்ரிச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள காட்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாலண்ட் பிளேய்ன் பசுமைப் பாதுகாப்புப் பகுதியில் பராமரிக்கப்படவுள்ள மற்றோர் அரிய வகைத் தாவரமான பிட்சர் செடி என்றழைக்கப்படும் குடுவைச் செடி.
ஹாலண்ட் பிளேய்ன் பசுமைப் பாதுகாப்புப் பகுதியில் பராமரிக்கப்படவுள்ள மற்றோர் அரிய வகைத் தாவரமான பிட்சர் செடி என்றழைக்கப்படும் குடுவைச் செடி. - படம்: லா பிரதர்ஸ்

கிளமெண்டி வனப்பகுதிக்கு அருகில் கிட்டத்தட்ட 0.34 ஹெக்டேர் அல்லது காற்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்ட அப்பகுதி, ஹாலந்து பிளேய்ன் வீடமைப்புக்காகத் திட்டமிடப்பட்டுள்ள நிலப்பகுதியில் கிட்டத்தட்ட கால் பகுதியாகும். அது இயற்கையாகவே குடியரசின் அரிய மூன்று தாவர இனங்களுக்குத் தாயகமாக உள்ளது.

பாதுகாப்புடன் மேம்பாட்டையும் சமநிலையில் தக்கவைக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் தனது பெருந்திட்டத்தை திருத்தியுள்ளது என்று அந்த இடத்திற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

அப்பகுதி, எதிர்கால பூங்காவுடன் இணைக்கப்படும். அது இரு குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையில் இணைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலந்து பிளேய்ன் புதிய குடியிருப்பில் கிட்டத்தட்ட 2,500 வீடுகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

எனினும், பொறியியல் ஆலோசனை நிறுவனமான ஏஇசிஓஎம் (AECOM) அண்மையில் வெளியிட்ட 260 பக்க அறிக்கையில், அப்பகுதி பாதுகாக்கப்பட்ட போதிலும், ஹாலந்து பிளேய்ன் பகுதியின் மேம்பாடு அப்பகுதியின் பல்லுயிர் தன்மையைப் பெரிதும் பாதிக்கவே செய்யும் என்று எச்சரித்துள்ளது.

1.56 ஹெக்டர் காட்டுப்பகுதி உட்பட ஏறக்குறைய 2.71 ஹெக்டர் தாவரங்கள் நிறைந்த பசுமைப் பகுதி அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட மொத்தம் 14.5 ஹெக்டர் பகுதியில் ஆறு தாவர இனங்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. அந்த அறிக்கை கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு அருகிவரும் ஆபத்தில் உள்ள தாவரங்களை நட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. முந்தைய ஆய்வுகளை மேற்கோள்காட்டி, மிக ஆபத்தான அருகிவரும் வைக்கோல் தலை புல்புல், சுந்தா எறும்புதின்னி உட்பட மொத்தம் 131 விலங்கு இனங்கள் ஆய்வுப் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதி சிங்கப்பூரில் குறைந்து வரும் பசுமை இடங்களுக்கு இடையில் பயணிக்கும் வனவிலங்குகள் ஓய்வெடுப்பதற்கான முக்கிய நிறுத்தப் புள்ளியாக அடையாளம் காணப்பட்டதாகவும் அறிக்கை கூறியது.

ஹாலண்ட் பிளேய்னுடன் இணைக்கப்பட்ட லோரல் உட் அவென்யூவை மேம்படுத்துவதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் நியமித்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தது.

ஆலோசனை நிறுவனமான ஆரேக்கான் தயாரித்த 106 பக்க அறிக்கையில், வெளவால்களின் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை கண்டறியப்பட்டது.

ஹாலந்து பிளேய்ன் அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜனவரி 8 வரை https://form.gov.sg/ 69046462171dabadc3d16a9a என்ற பக்கத்தில் கருத்துரைக்கலாம். லோரல் உட் அவென்யூ அறிக்கை குறித்து https://form.gov.sg/693129a457030fb0024ac2a3?ref=inline-article என்ற பக்கத்தில் கருத்து தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்