தெம்பனிஸ் பொலிவார்ட் பூங்காவின் மேற்குப் பகுதி செப்டம்பர் 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் தங்கள் அக்கம்பக்கத்தில் மேலும் ஒரு பசுமை இடத்தை எதிர்பார்க்கலாம்.
தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தில் அமைந்துள்ள அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதி 4.78 ஹெக்டர் பரப்பளவிலானது. அது, ஆறரை காற்பந்துத் திடல்களின் அளவுக்குச் சற்று பெரியது.
பிள்ளைகளுக்கான அறுபது மீட்டர் தூர சைக்கிளோட்டப் பாதை, தோட்ட ஊஞ்சல்கள், வெளிப்புற உடற்பயிற்சிப் பகுதி உள்ளிட்ட வசதிகள் அங்கு அமைந்திருக்கும்.
கிழக்கு, மேற்குப் பகுதிகளை உள்ளடக்கும் அந்தப் பூங்கா, தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை இணையத்தில் நடத்தப்பட்ட கருத்தாய்வில், குடியிருப்பாளர்களின் யோசனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
600க்கும் மேற்பட்ட பதில்கள் பெறப்பட்டன. இயற்கை விளையாட்டுத் தோட்டம், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடிய புல்வெளி உள்ளிட்ட பரிந்துரைகள் யோசனைகளில் அடங்கும். அவை இரண்டும் பூங்காவின் வடிவமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
தெம்பனிஸ் பொலிவார்ட் பூங்காவின் கிழக்குப் பகுதி வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிஸ் பொலிவார்ட் பூங்கா புதிய, எதிர்வரும் வீடமைப்புத் திட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
அது, ‘சன் பிளாசா’, ‘தெம்பனிஸ் இகோ கிரீன்’, ‘தெம்பனிஸ் பார்க் கனக்டர்’ போன்ற அந்தப் பகுதியில் உள்ள மற்ற பசுமை இடங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.