தங்கள் குத்தகையைப் புதுப்பிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) காப்பிக்கடை நடத்துநர்கள், மலிவுக் கட்டண உணவு வகைகளை வழங்குவது சனிக்கிழமை (ஜனவரி 10) முதல் கட்டாயமில்லை.
குடியிருப்புப் பகுதிகளில் உணவை மலிவு விலையில் வைத்திருக்கத் தொடங்கப்பட்ட நீண்டகாலத் திட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
அதிகரிக்கும் செலவுகள், மலிவுக் கட்டண உணவுக்கான குறைவான தேவை, சீரற்ற உணவுத் தரம், மாறுபடும் உணவு அளவு ஆகியவை குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த கருத்துகளைத் தொடர்ந்து, நடத்துநர்களும் கடைக்காரர்களும் எழுப்பிய கவலைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வீவக தெரிவித்தது.
கடந்த 2018ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஊட்டச்சத்து, உணவின் அளவு, அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவுகளுக்கு மத்தியில் கடைக்காரர்களால் இவ்வளவு குறைந்த விலையில் தொடர்ந்து விற்க முடியுமா என்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில், இத்திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருப்பதை உறுதிசெய்ய, ஜனவரி 10 முதல் வீவக இத்திட்டத்தை மாற்றியமைக்க உள்ளது.
தொடர்ந்து மலிவுக் கட்டண உணவுகளை வழங்க விரும்பும் காப்பிக்கடை நடத்துநர்கள் இதற்கான நிதி ஆதரவுகளைப் பெறுவார்கள்.
வீவக வாடகைக் காப்பிக்கடைகளைப் பொறுத்தவரை, நடத்துநர்களுக்கு முன்பு ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்பட்ட 5 விழுக்காடு வாடகைக் கழிவு, இனி மூன்றாண்டு குத்தகைக்காலம் முழுமைக்கும் வழங்கப்படும்.
தற்போது மலிவுக் கட்டண உணவு வழங்கி வரும் வாடகைக் காப்பிக் கடைகளுக்கும், அவற்றின் மீதமுள்ள குத்தகைக் காலத்திற்கு இந்தக் கழிவு கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், முன்பு எவ்வித சலுகையும் பெறாத தனியார் காப்பிக்கடை இயக்குநர்களுக்கு, அவர்களின் தற்காலிகப் பயன்பாட்டு உரிமக் கட்டணத்தில் கழிவு வழங்கப்படும்.
இந்தச் சேமிப்புத் தொகை முழுவதும் மலிவுக் கட்டண உணவுகளை விற்கும் கடைக்காரர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று வீவக வலியுறுத்தியது. இயக்குநர்கள் இதற்கான உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதோடு, கழிவுத்தொகை எவ்வாறு பகிரப்படுகிறது என்பதைத் தெரிவிக்கவும் வேண்டும். கிடைக்கும் பலன்கள் முழுமையாக விநியோகிக்கப்படாவிட்டால், வீவக வாடகைக் கழிவை ரத்து செய்து திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடும்.
மலிவுக் கட்டண உணவுகளின் வரம்பும் முறைப்படுத்தப்படும். இத்திட்டத்தில் பங்கேற்கும் காப்பிக்கடைகள் இனி மூன்று மலிவுக் கட்டண உணவுகளையும் இரண்டு மலிவுக் கட்டண பானங்களையும் வழங்க வேண்டும். அந்த உணவுகளில் ஒரு இறைச்சி, இரண்டு காய்கறிகளுடன் கூடிய சோறு, ஒரு ஹலால் உணவு, ஒரு காலை உணவு ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இதற்கு முன், காப்பிக் கடையின் வகையைப் பொறுத்து இரண்டு முதல் ஆறு வகை உணவு வரை வழங்க வேண்டியிருந்தது. மேலும், உணவு வகைகளில் குறிப்பிட்ட வரையறை இல்லாததால், ஒவ்வோர் இடத்திலும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருந்தன.
இந்த உணவுகளுக்கான விலையை வீவக நிர்ணயிப்பதில்லை. நடத்துநர்களே விலையை முன்மொழிகின்றனர். தற்போது பெரும்பாலான மலிவுக் கட்டண உணவு கிட்டத்தட்ட $3.50 விலையில் விற்கப்படுகிறது.
டிசம்பர் 31 நிலவரப்படி, மொத்தம் உள்ள 805 காப்பிக் கடைகளில், 350 வீவக வாடகைக் காப்பிக் கடைகளும் 48 தனியார் காப்பிக் கடைகளும் இத்திட்டத்தின்கீழ் மலிவுக் கட்டண உணவுகளை வழங்கி வருகின்றன. மேலும் 2030க்குள் 43 புதிய காப்பிக் கடைகள் கட்டி முடிக்கப்படவுள்ளன.
பெரும்பாலான இயக்குநர்களுக்குக் குத்தகையைப் புதுப்பிக்கும் நேரம் இன்னும் வரவில்லை என்பதால், குறுகிய காலத்தில் மலிவுக் கட்டண உணவுகளை வழங்கும் கடைகளின் எண்ணிக்கையில் திடீர் குறைவு ஏற்படாது என்று வீவக தெரிவித்தது.

