ஒரு நல்ல கொள்கை என்பது ஒரு நல்ல யோசனை மட்டுமல்ல என்றும் அதனைச் செயல்படுத்த பல அம்சங்கள் தேவை என்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
பிடோக் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) மாலை இடம்பெற்ற மக்கள் செயல் கட்சியின் (மசெக) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சிலர் கட்சியின் நிறமான வெள்ளை நிறச் சட்டைகளை அணிந்திருந்தனர். மற்றவர்கள், மசெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பதாகைகளையும் கட்சியைப் பிரதிபலிக்கும் பலூன்களையும் ஏந்தியிருந்தனர்.
அத்தொகுதியில் மசெக அணிக்குத் தலைமையேற்கும் அமைச்சர் டோங் உரையாற்றினார்.
ஒரு நல்ல கொள்கையை, வெறும் அறிவிப்பதைத் தாண்டி, அது எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதை கட்சிகள் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
“அவற்றைச் செயல்படுத்தக்கூடியதாகவும் நடைமுறைபூர்வமாகவும் மாற்றியமைக்க வேண்டும். அவை குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பொருளியல் சார்ந்து நல்ல பலன்களை அளிக்க வேண்டும்,” என்றும் திரு டோங் சொன்னார்.
எடுத்துக்காட்டாக, பன்னாட்டு நிறுவனங்களின்மீது அதிக வரி விதிப்பது, தேசிய சேமிப்புகளிலிருக்கும் (national reserves) பணத்தை எடுத்துச் செலவிடுவது உள்ளிட்ட பாட்டாளிக் கட்சியின் கொள்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
பன்னாட்டு நிறுவனங்களின்மீது அதிக வரி விதித்தால் அவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்ற அமைச்சர், இதனால் சிங்கப்பூரர்களின் வேலைகள் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், தேசிய சேமிப்புகளிலிருந்து அதிகமாகப் பணத்தை எடுத்துச் செலவழிக்கும்போது எதிர்காலத் தலைமுறையினருக்கான வளங்கள் குறைய வாய்ப்பு இருப்பதால், இந்த யோசனை உண்மையிலேயே புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான மற்ற நான்கு மசெக வேட்பாளர்களான தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், திருவாட்டி ஜெசிக்கா டான், திரு தினேஷ் வாசுதாஸ், திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகியோரும் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினர்.
சிங்கப்பூரர்களை பயமுறுத்துவதற்காகத் தேவையில்லாத விஷயங்களை மசெக கூறிவருகிறது என்று எதிர்க்கட்சியினர் அண்மையில் குறிப்பிட்டிருந்ததைப் புதுமுகமான திரு தினேஷ் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
இன்றைய சவாலான உலகச் சூழலில் நமது பொருளியல் வளர்ச்சி அடுத்த சில அண்டுகளுக்கு மெதுவடையலாம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டதைச் சுட்டிய திரு தினேஷ், இது நாம் எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்புகளின் சான்று அல்லவா என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சியினர் பலர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இணைந்திருந்தாலும் அவர்கள் உண்மையில் சிங்கப்பூரர்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள் என்றும் அவர் சொன்னார்.
பிரசாரக் கூட்டத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், முன்னாள் அமைச்சர் லிம் சுவீ சே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தோ யி பின் ஆகியோரும் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினர்.
இறுதியாக உரையாற்றிய துணைப் பிரதமர் ஹெங், ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியமான முடிவு நம் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பலதரப்பினரின் குரலும் ஒலிக்க விரும்புகிறோம் என்று எதிர்க்கட்சியினர் கூறினாலும், அது எவ்வித நன்மையும் வழங்காது என்று துணைப் பிரதமர் விளக்கினார். பிற நாடுகளில் மாற்றுக் குரல்களால் மோதல்கள் உருவாகி, அவர்களது தேசம் முன்னேற்றமின்றி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு சிங்கப்பூர் தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், இக்கடினமான காலங்களையும் தாண்டி நம்மால் மேலும் வலிமையுடன் முன்னேற முடியும் என்று திரு ஹெங் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமருக்கும் மசெகவுக்கும் உறுதியான ஆதரவை வழங்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.