சிங்கப்பூரின் பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களை வசப்படுத்த பல்வேறு கட்சிகள் மாறுபட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன.
கரடி பொம்மைகள், ‘பிஏபி செங்காங்’ என்று அச்சிடப்பட்ட சிறிய வெள்ளைச் சட்டைகள் ஆகியவற்றை மக்கள் செயல் கட்சியின் செங்காங் ஈஸ்ட் கிளைக்கு வந்த 30 குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற ‘பில்ட்-அ-பேர்’ (Build-A-Bear) பயிலரங்கில் அந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
ரிவர்வேல் டிரைவ் 124A புளோக்கில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடைவதற்காக மக்கள் செயல் கட்சி அண்மை வாரங்களில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ஒன்று.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வு அறிக்கை இம்மாதம் (மார்ச் 11) வெளியானதை அடுத்து அரசியல் கட்சிகள் மக்களைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை நடத்துகின்றன.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மீண்டும் பிளஷிஸ் (Plushies) எனும் பொம்மைகளை வெளியிட்டுள்ளது. கட்சி கடைப்பிடிக்கும் வெளிப்படைத்தன்மை, இரக்கம் போன்ற குணங்களை அடிப்படையாகக் கொண்டு அட்டிக்கா (Otica) என்ற பெயரியில் பொம்மைகளைக் கட்சி விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அட்டிகா பொம்மைகள் மக்களிடையே பிரபலமானது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கொடிகள், டி சட்டைகள், தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானின் புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிட பங்காளிகளுடன் பேசிவருவதாகச் சொன்னது. கட்சியின் உருவப்பொம்மையும் பிரசார நடவடிக்கைகளில் இணைந்துள்ளது.
பாட்டாளிக் கட்சி அதன் பிரசார நடவடிக்கைகள் பற்றி கருத்துரைக்கவில்லை. பொருள்களை விநியோகம் செய்வது பொதுத் தேர்தலின் நோக்கம் அல்ல என்று அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி உலா செல்லும்போது பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் மக்களுக்குக் கட்சி பிரசுரங்களையும் கையேடுகளையும் கொடுத்துவருகின்றனர். அதோடு வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கி வருகின்றனர்.