சிங்கப்பூரின் சந்தை சிறியது என்பதால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலக அளவில் கால் பதிக்க முயலவேண்டும் என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.
அனைத்துலக அளவில் விரிவாகும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் பங்காளித்துவ உடன்பாட்டில் இணைய முடியும். அது இருதரப்புக்கும் நன்மையளிப்பதுடன் திறன்களை வளர்க்கவும் விநியோகத் தொடரில் ஏற்படும் அபாயங்களைச் சமாளிக்கவும் உதவும் என்றார் திரு டான்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் தொழில்துறை உருமாற்ற மாநாட்டின் இறுதி நாளில் அவர் பேசினார்.
கலந்துரையாடல் அங்கத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நன்மை அளித்துள்ளதை நிறுவன நிர்வாகிகள் குறிப்பிட்டனர். அத்தகைய பங்காளித்துவ உடன்பாடுகள் தங்கள் வர்த்தக இலக்கை விரிவுபடுத்த உதவியதையும் அவர்கள் கூறினர்.
உலக அளவில் தன்னைப்பேணித்தனப்போக்கு அதிகரித்துள்ளதை முன்னிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குமான ஒத்துழைப்பு இன்னும் அவசியமாக இருக்கிறது என்று திரு டான் வலியுறுத்தினார்.
அமெரிக்க-சீன வர்த்தகப் போர், புவிசார் அரசியல் போட்டித்தன்மை ஆகியவற்றையும் திரு டான் சுட்டினார்.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை பல நீண்டகால ஒத்துழைப்புகள் உள்ளன என்றும் விமானத் துறை, மருத்துவத் தொழில்நுட்பம், பகுதி மின்கடத்தி ஆகிய துறைகளில் சிங்கப்பூர் ஏற்கெனவே வேரூன்றிவிட்டது என்றும் நிறுவன நிர்வாகிகள் கூறினர்.
அத்தகைய துறைகளில் உள்ள பங்காளித்துவ உடன்பாடுகள் காலப்போக்கில் உருமாறியிருப்பதையும் அவர்கள் பகிர்ந்துகொன்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தகங்களும் திறன் உருமாற்றுத் திட்டத்தைப் பயன்படுத்தி நிதி ஆதரவு பெறலாம் என்றது சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சிக் கழகம்.
உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களைக் களைய திறன் உருமாற்றுத் திட்டம் உதவுகிறது.
அதோடு, பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகள் என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உள்ளூர் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குத் திட்டம் கைகொடுக்கிறது.