தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்சி அரசியல் ஒலிபரப்பு: வாக்குச் சேகரிப்பில் முனைந்த எதிர்க்கட்சிகள்

2 mins read
df7f797a-6449-4918-8796-a32653815aa3
ஜாலான் புசார் குழுதொகுதியில் போட்டியிடும் சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் விக்னேஸ்வரி வி.ராமச்சந்திரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

பொதுத் தேர்தலில் போட்டியிடும் எட்டு அரசியல் கட்சிகளின் முதல் சுற்றுப் பிரசாரச் செய்திகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தொலைக்காட்சியிலும் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பாயின.

அதில் பேசிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சி.நல்லகருப்பன், நாட்டின் பொருளியல் வளர்ச்சி பணக்காரர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் யாரும் பின்தங்கிவிடக் கூடாது என்றும் கூறினார்.

விலைவாசி ஏற்றம், வேலை, வீட்டு வசதி உள்ளிட்ட மக்களின் கவலைகளைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் மக்களுக்காகக் குரல்கொடுப்போம் என்றும் உறுதிகூறினார்.

சிங்கப்பூரர்களின் மாறுபட்ட சிந்தனைகளை வெளிப்படுத்தும் சமநிலையான நாடாளுமன்றம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

சீர்திருத்த மக்கள் கூட்டணி சார்பாகப் பேசிய விக்னேஸ்வரி வி.ராமச்சந்திரன், சிங்கப்பூர்க் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இலவசப் பள்ளி உணவு, இலவச மருத்துவம் வழங்கத் தங்கள் கட்சி வலியுறுத்தும் என்றார்.

வீவக மறுவிற்பனை வீடுகளை நிரந்தரவாசிகள் வாங்குவதைத் தடுக்கத் தாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பாக புதுமுக வேட்பாளர் அரிஃபின் ஷா உரையாற்றினார்.

சிங்கப்பூரர்களில் பலர் விலைவாசி ஏற்றம், வேலைப் பளுவால் ஏற்படும் மனவுளைச்சல் போன்றவற்றால் கவலைப்படுவதாகவும் மக்களின் மனநிலை, பொருளியல் பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் செயல் கட்சி (மசெக), பொருள், சேவை வரி, தண்ணீர்க் கட்டணம், பொதுப் போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்தல், வேலைகளைக் காத்தல் உள்ளிட்ட அம்சங்களுக்காகத் தங்கள் கட்சி பணியாற்றும் என்று திரு அரிஃபின் ஷா உறுதியளித்தார்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் சார்பாகப் பேசிய அதன் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ஹரிஷ் மோகனதாஸ், தாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை என்றார்.

கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி உயர்ந்தாலும் சம்பளம் ஒரே நிலையில் இருப்பதாகவும் எதிர்காலம் முன்னெப்போதையும்விட நிச்சயமற்றதாக இருப்பதாகவும் கூறினார்.

‘ஜிஎஸ்டி’யை மீண்டும் 7 விழுக்காடாகக் குறைத்தல், மெடிஷீல்டுலைஃப், மெடிஃபண்ட் திட்டங்களை விரிவுபடுத்துதல், வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் குடிமக்களுக்கு முன்னுரிமை உட்பட ஐந்து அம்சங்களின்கீழ் தங்கள் கட்சியின் பரிந்துரைகளை எடுத்துரைத்தார்.

தங்களைத் தேர்ந்தெடுத்தால், சாதாரண சிங்கப்பூரர்கள் கௌரவத்துடன் வாழவும் குடும்பங்களை அமைக்கவும் அச்சமின்றி முதிர்ச்சியடையவும் உகந்த இடமாகச் சிங்கப்பூரை அமைக்க, கட்சி பணியாற்றும் என்று உறுதிகூறினார்.

குறிப்புச் சொற்கள்