கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாசிர் பாஞ்சாங் முனையம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, அக்கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
எண்ணெய்க் கசிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட கடலின உயிரினங்கள், தற்போது படிப்படியாக மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தேசிய பூங்காக் கழகம் சனிக்கிழமையன்று (மே 16) ஜூரோங் லேக் கார்டன்சில் நடத்திய எண்ணெய்க் கசிவு நிர்வாக கருத்தரங்கில் இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் பகிரப்பட்டன.
‘ஆற்றலை வளர்த்தல், பங்குதாரர்களை இணைத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், ஒய்லெட் வனவிலங்குப் பராமரிப்புக் கட்டமைப்பு, ஐடிஓபிஎஃப் போன்ற உலகளாவிய அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டன.
செயிண்ட் ஜான்ஸ் தீவு, லாசரஸ் தீவு ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின்படி, கடலடி வண்டல் மண்ணில் தேங்கியிருந்த எண்ணெய்யின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நெதர்லாந்துக் கொடியுடன் வந்த ‘வொக்ஸ் மேக்சிமா’ என்ற தூர்வாரும் கப்பலும் சிங்கப்பூர்க் கொடியுடன் வந்த ‘மெரின் ஆனர்’ என்ற எரிபொருள் கப்பலும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நேர்ந்தது. இதனால் ‘மெரின் ஆனர்’ கப்பலின் எண்ணெய்த் தொட்டி உடைந்து, ஏறத்தாழ 400 டன் எண்ணெய் கடலில் கசிந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் கடற்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய்க் கசிவு விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த எண்ணெய்ப் படலம் செந்தோசா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லாப்ரடோர் இயற்கை வனப்பகுதி உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளை மாசுபடுத்தியது.
கடலைச் சுத்தப்படுத்தும் பணிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தன. இந்த விபத்தில் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியதற்காக ‘வொக்ஸ் மேக்சிமா’ கப்பலைச் சேர்ந்த நான்கு நெதர்லாந்து மாலுமிகளுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய விபத்துகளின்போது சிங்கப்பூர் எவ்வாறு விரைவாகவும் பயனுள்ள முறையிலும் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் வனவிலங்கு பராமரிப்பு, அவசரகாலத் தகவல் பரிமாற்றம் குறித்தும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

