தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் வரவிருக்கும் பதிவுமுறை குறித்து விற்பனையாளர்கள் அதிருப்தி

2 mins read
f6a7e206-7183-4064-8f51-8c80f6207cda
பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் கிட்டத்தட்ட 600 கடைகள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் மார்ச் மாதம் முதல் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்திற்குள் நுழையும் பார்வையாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் புதிய முறையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக விற்பனையாளர்கள் கருதுகின்றனர். அதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மொத்த விற்பனை நிலையத்திற்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் வருகையை இணையம் அல்லது நிலையத்தின் காவல் சாவடியில் இருக்கும் பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என சிங்கப்பூர் உணவு அமைப்புத் தெரிவித்தது.

மேலும், வளாகத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் முன் அவர்கள் தங்கள் அடையாள ஆவணங்களை வருட வேண்டும் என்றும் அது கூறியது.

நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் பேரளவில் நோய்ப் பரவல் தடுப்புக்கான ஆயத்தநிலையை உறுதி செய்வதற்கும் இந்தப் புதிய முறை உதவும் என அமைப்பு மேலும் குறிப்பிட்டது.

இந்த முறை கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் இந்தப் புதிய முறைக்கு ஏற்றவாறு மாறுவதற்குப் பயனர்களுக்கு நேரம் கொடுக்கப்படும் என்றும் அமைப்பு எடுத்துரைத்தது.

இந்தப் புதிய முறை தங்கள் வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் செயல்திறனுக்கும் இடையூறு ஏற்படுத்தும் என்று தாங்கள் கவலைப்படுவதாக விற்பனையாளர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

இந்த முறை வாடிக்கையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இயற்கைமுறை உற்பத்திப் பொருள்களுக்கான மொத்த விற்பனையாளர் ‘ஜென்சின் ஆர்கானிக்’ நிறுவனத்தின் மேலாளர் திருவாட்டி பிரிம் டினா கூறினார்.

“நிலையம் அமைந்துள்ள இடம் ஏற்கெனவே தொலைதூரத்தில் உள்ளது. மேலும், இந்தப் புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு இவ்விடத்திற்கு வராமல் இருக்க மற்றொரு காரணமாக அமைந்துவிடும். இதனால் நாங்கள் நிறைய வர்த்தகத்தை இழக்க நேரிடும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஊழியர்களுக்கு அடையாள அட்டை இருக்க வேண்டும். அப்படியிருந்தால் ஒவ்வொரு நாளும் இந்த முறையை அவர்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. நுழைவாயிலில் வரிசையில் நிற்பதற்கு நீண்ட நேரம் வீணாகும் நிலை உருவாகும் என்றார்,” திருவாட்டி டினா.

குறிப்புச் சொற்கள்