இவ்வாண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமையில் களமிறங்கிய மக்கள் செயல் கட்சி (மசெக) அணி வெற்றி பெற்றுள்ளது.
மசெக 67.66 விழுக்காடு வாக்குகளையும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 32.34 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.
கடந்த 2020ஆம் பொதுத்தேர்தலில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையிலான மசெக அணி மும்முனைப் போட்டியில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியை 64.16 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றது. இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 23.67 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
மூத்த அமைச்சர் டியோ ஒய்வுபெறும் நிலையில், அவரின் இடத்தில் அமைச்சர் இந்திராணி ராஜா பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி மசெக அணிக்கு இந்தப் பொதுத் தேர்தலில் தலைமை வகித்தார். இதுவே அவர் தலைமை வகித்த முதல் வேட்பாளர் அணி ஆகும்.
இதற்குமுன் அவர் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2001ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
அவருடன், பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி மசெக அணியில் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், திரு ஷாரில் தாஹா, திருவாட்டி வெலரி லீ ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில், பாசிர் ரிஸ்-பொங்கோல் தொகுதியைச் சேர்ந்த 87,768 வாக்காளர்களும் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியைச் சேர்ந்த 12,871 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தமாக 100,639 வாக்காளர்களை அப்புதிய குழுத்தொகுதி கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி வேட்பாளர்கள், பிடோக் விளையாட்டரங்கில் ஆதரவாளர்களைச் சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேடையில் உரையாற்றிய அமைச்சர் இந்திராணி, “நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். அதே நேரத்தில், நீங்கள் சொல்வதற்குச் செவிசாய்த்து, புதிய திட்டங்களை உங்களுடன் இணைந்து உருவாக்குவோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களைப் புரிந்துகொள்வதை எங்கள் இலக்காகக் கொண்டு, அவர்களுக்காகவும் தொடர்ந்து உழைப்போம்,” என்றார்.
முதல்முறையாக இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொண்டதாகக் கூறினார் பாசிர் ரிஸ் தொகுதி குடியிருப்பாளர் ஷ்ரேயா, 27.
“கொவிட்-19 தொற்றுநோய் பரவலினால் கடந்த பொதுத்தேர்தலின்போது வீட்டிலிருந்தே முடிவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்து அறிந்துகொண்டேன். இந்த முறை நேரில் வந்து, இத்தனை ஆதரவாளர்களுடன் ஒன்றிணைந்து, கொண்டாட முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

