தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புலாவ் உபினில் சமூக மரம் நடும் நிகழ்வு

3 mins read
55e9e907-16ab-4bfa-b73f-591c1924f227
சமூக மரம் நடும் இயக்கத்தில் பங்கேற்ற மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

பாசிர் ரிஸ் - சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா, சாங்கி பகுதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலரி லீ ஆகியோர் தேர்தலுக்குப் பின் முதல் முறையாகப் புலாவ் உபின் குடியிருப்பாளர்களைச் சனிக்கிழமை (ஜூன் 14) சந்தித்தனர்.

அத்தீவில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவர்களின் நலன், தேவைகள் குறித்து அவ்விருவரும் கேட்டறிந்தனர். தீவிலேயே பிறந்து வளர்ந்த சில மூத்தோரிடம் அவர்களது சிறு வயது நினைவுகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

“இங்குள்ள பலருக்கும் சிங்கப்பூர் மத்தியப் பகுதிகளிலும் வீடுகள் இருப்பதால் மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் சிரமம் இல்லை. இப்பகுதிக்கான சில உள்கட்டமைப்பு மேம்பாடுகள், மின்னிலக்கச் சேவைகள் உள்ளிட்ட சில தேவைகளைப் பகிர்ந்துள்ளனர். உரிய பொது நிறுவனங்களுக்கு அவற்றைப் பரிந்துரைத்துள்ளோம்,” என்றார் அமைச்சர் இந்திராணி.

இப்பகுதியின் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து அறிந்துள்ளோம் என்றும் அதன் தனித்துவம் மாறாமல் மேலும் பல நவீன அம்சங்களைக் கொணர்வது பற்றி ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.

புலாவ் உபின் பகுதியில் உள்ள மூத்த இணையருடன் உரையாடும் அமைச்சர் இந்திராணி ராஜா.
புலாவ் உபின் பகுதியில் உள்ள மூத்த இணையருடன் உரையாடும் அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: லாவண்யா வீரராகவன்

தொடர்ந்து இப்பகுதிக்கு வருகை தருவோர் குறித்துப் பேசிய திருவாட்டி வேலரி, “புலாவ் உபினுக்கு ஆண்டுதோறும் 300,000 பேர் வருகையளிக்கின்றனர். இப்பகுதியின் உள்ளூர்ச் சுற்றுலா எண்ணிக்கையை அதிகரிக்க பண்பாட்டுச் சமையல், கலை, கைவினைப் பயிலரங்குகள் உள்பட வருகையாளர்களை ஈர்க்கும் திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்யவுள்ளோம். ‘உபினின் நண்பர்கள்’ அமைப்பையும் ஈடுபடுத்தவுள்ளோம்,” என்றார்.

சிங்கப்பூரின் 60ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் தொடர்பில் நடைபெறும் ‘ஒரு மில்லியன் மரங்கள்’ நடும் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புலாவ் உபின் தீவிலும் சமூக மரம் நடும் முன்னெடுப்பு நடைபெற்றது.

இவ்விழாவில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திராணி ராஜா, டெஸ்மண்ட் டான், ஷரில் தாஹா, வேலரி லீ ஆகியோர் பங்கேற்றனர்.

பாசிர் ரிஸ் சாங்கி அடித்தள அமைப்புகளும் பாசிர் ரிஸ் சாங்கி நிலைத்தன்மைச் செயல்பாட்டுக் குழுவும் தேசியப் பூங்காக் கழகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் 16 உள்ளூர்த் தாவர வகைகளைச் சேர்ந்த 80 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், நாடாளுமன்ற உறுப்பினர் ஷரில் தாஹா ஆகிய இருவரும், செக் ஜாவா ஈரநிலப் பகுதியையும் பேக்கன் குவாரிப் பகுதியையும் சுற்றிப்பார்த்தனர்.

சமூக முன்னெடுப்பாக இடம்பெற்ற மரம் நடும் பணியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பாசிர் ரிஸ் குடியிருப்பாளரான சண்முகசுந்தரம் அருண், 38, தமது குடும்பத்துடன் மரம் நடும் பணியில் ஈடுபட்டார்.

“குழந்தைகளை விடுமுறைக் காலத்தில் இதுபோன்ற இயற்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்து வந்தோம்,” என்றார் அவர்.

“நகரத்தின் சுற்றுச்சூழலிலேயே இருக்கிறோம். இயன்றபோது இயற்கையுடன் நேரம் செலவிடுவதில் மகிழ்ச்சி. குறிப்பாக, மகள் அ‌ஷ்மிதாவும் மகன் வி‌ஷ்வந்த்தும் மரம் நடுதலில் ஈடுபட்டது நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகிறோம்,” என்றார் அவருடைய மனைவி ‌‌‌ஷாலி நிவேதா, 33.

ஆசிரியர் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்துக் கற்றுக் கொடுத்துள்ளதாகச் சிறுமி அஷ்மிதா, 9, கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்திராணி ராஜாநாடாளுமன்ற உறுப்பினர்கள்பாசிர் ரிஸ் - சாங்கிதொகுதி