பாசிர் ரிஸ் குடியிருப்பாளர்களுக்கு வசதியாக அமையும் புதிய கடைத்தொகுதியில் ஆண்டிறுதியில் பலதுறை மருந்தகம் திறக்கப்படுவதோடு, 2025ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்துடன் அக்கடைத்தொகுதி இணைக்கப்படும்.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வசதிகளை மேம்படுத்தவும் அங்குச் சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள புதிய பாசிர் ரிஸ் மால் கடைத்தொகுதியும் அதற்குப் பக்கத்தில் உள்ள வசதிகளும் அமைகின்றன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது குடியிருப்புப் பேட்டையை உருமாற்றுதல்’ திட்டத்தின்கீழ், பாசிர் ரிஸ் வட்டாரத்தைப் புதுப்பிப்பதில் இந்தக் கடைத்தொகுதி பெரிய மைல்கல்லைக் குறிப்பதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறினார்.
அக்கடைத்தொகுதியின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் ஜூலை 22ஆம் தேதி பேசிய அவர், “பாசிர் ரிஸ் வட்டாரம் வளர்ச்சி அடைந்துள்ள அதேவேளையில், குடியிருப்பாளர்களின் தேவைகளும் மாறியுள்ளன,” என்றார்.
“எடுத்துக்காட்டாக, பொருள் வாங்கவும் சாப்பிடுவதற்கும் கூடுதல் கடைகள் தேவை என்றும் அக்கம்பக்க இடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் பல குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்,” என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சொன்னார்.
நான்கு மாடிகளில் மொத்தம் 34,900 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள பாசிர் ரிஸ் மால் கடைத்தொகுதியில் 150க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை, உணவு, பானக் கடைகளுடன் கேளிக்கை அம்சங்களும் உள்ளன.

