பாசிர் ரிஸில் எலித் தொல்லைக்கு முடிவுகட்ட முழுவீச்சில் நடவடிக்கை

2 mins read
4a4fa75d-0878-4421-af36-bd4dea25d160
பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் தொடங்கப்பட்டுள்ள ரேட்ஃபிக்ஸ் பிரசாரம். - படம்: சிஎன்ஏ இணையம்

பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் அதிகரித்துவரும் எலித் தொல்லைக்கு முடிவு கட்ட முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக பல்வேறு அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இரவு நேர கண்காணிப்புகள், உணவுக் கழிவைக் கட்டுப்படுத்துதல், எலித் தொல்லைகளை தவிர்ப்பதற்கான போதனைகள் உள்ளிட்டவை பிரசாரத்தில் அடங்கும் என்று சிஎன்ஏ தகவல் தெரிவித்தது.

பிரதமர் அலுவலக அமைச்சரும் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான இந்திராணி ராஜா, ‘ரேட்ஃபிக்ஸ்’ (RatFix!) பிரசாரம் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையாக இருக்கும் என்றும் எலிகளுக்கு உணவு கிடைப்பதைத் தடுத்து அவற்றை ஒழிப்பது நோக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இலையஸ் மாலில் பிரசாரத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி இந்திராணி ராஜா, “நான் பாசிர் ரிஸ்ஸுக்குக் குடியேறியபோது, ​​எலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதைக் கவனித்தேன், ஏன் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நகர மன்றத்திடம் விசாரித்தபோது மற்ற இடங்களைவிட இங்கு அதிக துவாரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.

“பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் உணவுக் கடைகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் எலிகளுக்கு எளிதாக உணவுக் கிடைத்து விடுகிறது. பாசிர் ரிஸ் முழுவதும் புதிய எம்ஆர்டி நிலையங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அங்குள்ள எலிகளின் துவாரங்கள் அழிந்து அவை மாற்று இடங்களுக்குச் செல்வது காரணமாக இருக்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“எலித் தொல்லைகள் குறித்து புகார்கள் வந்ததும் எலிப்பொறிகளை வைப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலி தொடர்பான பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப உத்திகளை வகுக்கும் அணுகுமுறை தேவை ,” என்று திருவாட்டி இந்திராணி குறிப்பிட்டார்.

எலித் தொல்லைகளுக்கு எதிரான பிரசாரம் ஐந்து அம்சங்களைக் கொண்டிருக்கும். எலிகளுக்குக் கிடைக்கும் உணவுகளைத் தடுப்பது; எலித் துவாரங்களை சுத்தமாக்குவது, எலிகளை அழிப்பது, எலிகள் பெருக பங்களிப்பவர்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது, அரசாங்க அமைப்புகள், குடியிருப்பாளர்கள், கடைக்காரர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது ஆகியன அவை.

எலிகளை ஒழிப்பதில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகராட்சி சேவை அலுவலகம், தேசிய சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, பாசிர் ரிஸ்-சாங்கி நகர மன்றம் மற்றும் உள்ளூர் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றின் நிபுணத்துவமும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்