பயணத்தைத் தவிர்க்கும் பயணிகள், பணத்தைத் திரும்பத் தரும் சுற்றுலா நிறுவனங்கள்

பயணத்தைத் தவிர்க்கும் பயணிகள், பணத்தைத் திரும்பத் தரும் சுற்றுலா நிறுவனங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

03 Mar 2026 - 4:52 pm

2 mins read

மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் வெடித்துள்ளதால் அங்குள்ள நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கின. தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தாக்கி வருகிறது.

இதனால் துபாய், கத்தார், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வது ஆபத்து எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐரோப்பாவுக்கு மத்திய கிழக்கு வழியாகச் செல்வதையும் மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல் மத்திய கிழக்கு வான்வெளிப் பகுதிகளை விமான நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. பல பயணங்களையும் அவை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்ட பலர் தற்போது செய்வது அறியாமல் நிற்கின்றனர்.

சிங்கப்பூர் பயணிகள் பலர் தங்களது சுற்றுலா நிறுவனங்களிடம் பேசி வருகின்றனர். பயணத்தைத் தள்ளி வைப்பது, பணத்தைத் திரும்பப் பெறுவது அல்லது மாற்று வான்வழியில் மத்திய கிழக்கு செல்வது எனப் பல யோசனைகளில் உள்ளனர்.

இம்மாதம் மட்டும் இயூ ஹாலிடேஸ் (EU Holidays) 30 குழுக்களாக 750 சிங்கப்பூரர்களை ஐரோப்பாவுக்குச் சுற்றுலா மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் இப்போது பலர் பயணத்தை ரத்து செய்து பணத்தைத் திரும்பப்பெற்று வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) எகிப்து செல்லவிருந்த 20 பயணிகளும் தங்களது பயணத்தை ரத்து செய்து பணத்தைத் திரும்பப்பெற்றனர்.

“விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் முன்பதிவுகளை ரத்து செய்தாலும் அவற்றிடம் இருந்து பணம் கிடைப்பது சில காலம் எடுக்கும். இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகிறோம்,” என்றது இயூ ஹாலிடேஸ்.

விமானப் போக்குவரத்து இல்லாததால் வெளிநாடுகளில் தவிக்கும் 25 சிங்கப்பூர் பயணிகளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருவதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குசுற்றுலாப் பயணிகள்போர்