நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடத்திய குவிநோக்குக் குழுக் கலந்துரையாடலில் மேம்படுத்தப்பட்ட பேருந்து இணைப்புகள், கூடுதல் சலுகைகள் ஆகியவற்றுக்குப் பயணிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பயணிகளுக்கான ‘டிராவல் ஸ்மார்ட்’ சலுகையை மாலை உச்சவேளைக்கும் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
காலை உச்சவேளையின்போது சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள எம்ஆர்டி ரயில் கட்டமைப்புகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதே டிராவல் ஸ்மார்ட் ஜர்னீஸ் திட்டத்தின் இலக்கு.
காலை உச்சவேளையின்போது அந்த ரயில் பாதைகளைத் தவிர்க்கும் பயணிகளுக்குப் பயணக் கட்டணத்தில் 80 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவு கிடைக்கலாம்.
குவிநோக்குக் குழுக் கலந்துரையாடலில் 40 பேர் பங்கெடுத்தனர்.
நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்தைப் புதுப்பிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் தொடங்கிய நாடு தழுவிய பொது ஆலோசனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட திட்டம் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போதைய நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ஐ இது மெருகூட்டம்.
தொடர்புடைய செய்திகள்
மாறிவரும் பயணப் போக்குகள், தொழில்நுட்ப மேம்பாடு, நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, பயண வசதி போன்றவை குறித்து அது அலசி ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த ஆலோசனைத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை பொதுமக்களிடமிருந்து 3,500 பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகப் போக்குவரத்து துணையமைச்சர் பே யாம் கெங் தெரிவித்தார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஹேம்ஷர் சாலை அலுவலகத்தில் குவிநோக்குக் குழுக் கலந்துரையாடலை அவர் தொகுத்து வழங்கினார்.
முன்வைக்கப்பட்ட கருப்பொருள்களில் மேம்படுத்தப்பட்ட இணைப்பு, கூடுதல் வசதி, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை முதலியவை அடங்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
உள்கட்டமைப்புகளைக் கட்ட சிறிது காலம் எடுக்கும் என்பதை திரு பே சுட்டினார்.
மனிதவளப் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள பேருந்து ஓட்டுநர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
மொத்தம் ஆறு குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இதுவரை இரண்டு நிறைவுபெற்றுவிட்டன.
குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்களில் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 240 பேர் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

