2026 அக்டோபர் முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் நிலைத்தன்மைமிக்க விமான எரிபொருள் தொடர்பாக $1 முதல் $41.60 வரை தீர்வை செலுத்துவார்கள்.
இந்தத் தீர்வை, 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் விமானப் பயணச் சீட்டுகளுக்குப் பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 10) அன்று அறிவித்தது.
பயணிகள் பயணச்சீட்டு விலையுடன் தீர்வையையும் செலுத்துவார்கள். மேலும் விற்கப்படும் விமானப் பயணச் சீட்டில், தீர்வை தொகையை ஒரு தனித்துவமான வரியாக விமான நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும்.
நீண்ட தூரம் பறக்கும் பயணிகள் அதிக தீர்வை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், நீண்ட விமானப் பயணங்கள் அதிக எரிபொருளைப் பயன்படுத்துகின்றன என்று ஆணையம் தெரிவித்தது.
பிரிமியம் பிரிவுகளிலும் கட்டணம் அதிகமாக இருக்கும். வர்த்தக அல்லது முதல் வகுப்பில் உள்ள பயணிகள், வெவ்வேறு பிரிவின் வகுப்புகளில் உள்ள பயணிகளின் கரிம வெளியேற்றத்தைக் கணக்கிடுவதற்கான தொழில்துறை விதிமுறைகளின் அடிப்படையில், இக்கானமி வகுப்பில் உள்ளவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக தீர்வை செலுத்த வேண்டியிருக்கும் என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.
தீர்வையைக் கணக்கிட, உலகெங்கிலும் உள்ள இடங்கள் நான்கு புவிசார் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பயணம் செய்யும் தூரத்தின் அடிப்படையில், ஒவ்வோர் அடுத்தடுத்த வட்டாரத்துக்கு ஏற்ப தீர்வை அதிகரிக்கும்.
வட்டாரம் 1: தென்கிழக்கு ஆசியா; வட்டாரம் 2: வடகிழக்கு ஆசியா, தெற்காசியா, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினி; வட்டாரம் 3: ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள், நியூசிலாந்து; வட்டாரம் 4: அமெரிக்க நாடுகள் ஆகியன அவை.
பல நிறுத்தங்களைக் கொண்ட விமானப் பயணங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட உடனேயே அடுத்த இலக்கைப் பொறுத்து தீர்வை விதிக்கப்படும் என்று நவம்பர் 10 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி டேனியல் இங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்துக்கு, இக்கானமி அல்லது பிரிமியம் இக்கானமி வகுப்பில் உள்ள ஒரு பயணி பேங்காக்கிற்கு (வட்டாரம் 1) $1, தோக்கியோவிற்கு (வட்டாரம் 2) $2.80, லண்டனுக்கு (வட்டாரம் 3) $6.40, நியூயார்க்கிற்கு (வட்டாரம் 4) $10.40 என விமானப் பயணத்துக்குத் தீர்வை செலுத்த வேண்டும்.
“நிலைத்தன்மைமிக்க விமான எரிபொருள் விலைகள் மிதமான அளவில் உள்ளன,” என்று ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு ஹான் கோக் ஜுவான் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
2026ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணங்களுக்காக, 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் விமானப் பயணச் சீட்டுகளின் விற்பனைக் காலம், தொழில்துறை கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டது. இதனால் விமான நிறுவனங்களும் பயணிகளும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கும் என்று திரு ஹான் கூறினார்.
சிங்கப்பூர் வழியாகப் (டிரான்சிட்) பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தத் தீர்வை பொருந்தாது. பயிற்சி விமானங்களுக்கும் தொண்டு அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்கான விமானப் பயணங்களுக்கும் தீர்வை விதிக்கப்படாது என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.
“ஏப்ரல் 1, 2026 முதல் விற்கப்படும் பயணச் சீட்டுகளுக்கு மட்டுமே இந்த தீர்வை பொருந்தும் என்பதால் அக்டோபர் 1, 2026க்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பயணத்துக்கு இன்றே நீங்கள் பயணச் சீட்டு வாங்கினாலும்கூட தீர்வை விதிக்கப்படமாட்டாது,” என்று திரு இங் கூறினார்.

