உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் பயணியின் ‘பவர்பேங்க்’ எரிந்தது

உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் பயணியின் ‘பவர்பேங்க்’ எரிந்தது

1 mins read
6b3d8b08-1d90-43f3-865e-88780b832b62
ரயில் பயணியின் பையிலிருந்து புகை வெளியேறியது. - படம்: மதர்ஷிப் வாசகர்

ரயில் பயணி ஒருவரின் மின்தேக்கி (பவர் பேங்க்) தீப்பிடித்ததன் காரணமாக அது வைக்கப்பட்டிருந்த பையிலிருந்து புகை வெளியேறியது.

அந்தச் சம்பவம் திங்கட்கிழமை (ஜூலை 20) காலை 9 மணியளவில் உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்தது. பயணியின் பையிலிருந்து புகை கிளம்பியதைக் காட்டும் காணொளி ஒன்றைக் கண்டதாக மதர்ஷிப் இணையச் செய்தி குறிப்பிட்டது.

அது குறித்து ‘எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் லாம் ஷீயு காய் அந்த ஊடகத்திடம் விளக்கினார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழியில் செல்லும் ரயிலுக்காக உட்லண்ட்ஸ் நிலையத்தில் பயணி ஒருவர் காத்திருந்தபோது அவரது பையிலிருந்த மின்தேக்கியிலிருந்து புகை வெளியேறியதாகவும் அது குறித்து மற்றொரு பயணி நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் திரு லாம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிலைய ஊழியர் ஒருவர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தார். பாதிக்கப்பட்ட பயணியின் விரல்களில் தீக்காயம் ஏற்பட்டதால் அந்த ஊழியர் அவருக்கு உதவினார். அந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகையை வெளியேற்றி, பயணிகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த நிலையத்தின் காற்று வெளியேற்றக் கருவி இயக்கப்பட்டதாக திரு லாம் தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் காரணமாக, ரயில்கள் ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு உட்லண்ட்ஸ் நிலையத்தில் நிற்காமல் சென்றன. மேலும், அந்தச் சம்பவம் குறித்து ரயில்களிலும் நிலையத்திலிருந்த பயணிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் போதுமான அறிவிப்புகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மின்தேக்கிஉட்லண்ட்ஸ்எம்ஆர்டி