சிட்டி பிளாசா கடைத்தொகுதிக்கு அருகே சாலை சந்திப்புக்குமுன் இருக்கும் இடத்தில் மரம் முறிந்து அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தியது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கியிருந்த ஓட்டுநர்களையும் பயணிகளையும் அவ்வழியே சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது.
இந்தச் சம்பவம் சிங்கப்பூரர்களின் சமூக உணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தஞ்சோங் காத்தோங் ரோடுக்கும் கேலாங் ரோடுக்கும் இடையே இருக்கும் சாலை சந்திப்புக்கு முன்பு இருக்கும் இடத்தில் 20 மீட்டர் உயரமுள்ள மரம் விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காணொளிகளில், ஒரு சிறிய ரக லாரி உட்பட குறைந்தது நான்கு வாகனங்கள் மீது மரக்கிளைகள் விழுந்து கிடப்பதையும் இருவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
மேலும், கிட்டத்தட்ட 10 பேர் மழையையும் பொருட்படுத்தாமல் வாகனங்களின்மீது விழுந்த மரக்கிளைகளைச் சாலையின் ஓரமாக நகர்த்துவதையும் மற்றவர்கள் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களையும் பயணிகளையும் அவரவர் வாகனங்களை விட்டு வெளியேற உதவி செய்வதையும் அந்தக் காணொளிகளில் காண முடிந்தது.
தஞ்சோங் காத்தோங் ரோடு விபத்து குறித்து எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.55 மணிக்குத் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்தில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது எனவும் ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.
சாலையில் இருக்கும் மரக்கிளைகளை அகற்றும்பணி மாலை 4.30 மணியளவில் முடிவடைந்ததாக சாவ்பாவ் நாளேடு தெரிவித்தது.
இந்த மரம் சிட்டி பிளாசா கடைத்தொகுதியால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.