இந்திய நீதிமன்ற உத்தரவால் கடப்பிதழ், இந்திய விசா சேவைகள் சிங்கப்பூரில் பாதிக்கப்படவில்லை

இந்திய நீதிமன்ற உத்தரவால் கடப்பிதழ், இந்திய விசா சேவைகள் சிங்கப்பூரில் பாதிக்கப்படவில்லை

2 mins read
23356ce7-6bb6-40f5-9693-5fcd43da4034
இந்தியர்களின் கடப்பிதழ். - கோப்புப் படம்: நியூஸ் இந்தியா டைம்ஸ்

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு கடப்பிதழ், விசா போன்ற இந்தியத் தூதரகச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்து எடுக்க இந்திய அரசாங்கம் நடத்திய ஏலக்குத்தகையை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏலக்குத்தகை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று ஏலத்தில் தோல்வியடைந்த இரு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அந்த நடவடிக்கையை எடுத்தது.

அபுதாபி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் தூதரகச் சேவைகளை வழங்குவதற்கான ஏலக்குத்தகை அது.

ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டன, சில நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏன் தகுதிநீக்கம் செய்யப்பட்டன என்பன போன்ற சந்தேகங்களை அதிகாரிகள் போதுமான அளவு தெளிவுபடுத்தவில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நான்கு நாடுகளுக்கான தூதரகச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க புதிய ஏலக்குத்தகையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுச் சேவைகள் வழங்கப்படுவதில் எந்த இடையூறும் ஏற்படாமலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமலும் இருப்பதை உறுதிசெய்ய, தற்போதுள்ள நிறுவனங்கள் தொடர்ந்து தூதரகச் சேவைகள் வழங்க அனுமதிக்கப்படலாம் என்று அது மேலும் தெரிவித்தது.

இந்திய நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பால் சிங்கப்பூரில் கடப்பிதழ், விசா போன்ற சேவைகள் பாதிக்கப்படவில்லை என சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விக்குப் பதிலளித்தபோது அது அவ்வாறு குறிப்பிட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“சிங்கப்பூரில் இந்தியத் தூதரகம் சார்பில் தூதரகச் சேவைகளுக்கான விண்ணப்பங்களைப் பெற இரண்டு இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்கள் உள்ளன. அந்த ஏற்பாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை,” என்று தூதரகம் விளக்கி உள்ளது.

ஆயினும், ஆஸ்திரேலியாவின் இந்தியத் தூதரகச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளன. அந்தச் சேவைகளை வழங்கி வந்த ‘விஎஃப்எஸ் குளோபல்’ நிறுவனம் ஜூலை 1 முதல் கடப்பிதழ் மற்றும் விசா சேவைகளுக்குப் புதிய விண்ணப்பம் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கேன்பெராவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உத்தரவுகளை அதற்குக் காரணங்களாக அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடப்பிதழ்விசாதூதரகச் சேவை

தொடர்புடைய செய்திகள்