உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் உள்ள பேருந்து முனையங்களின் தானியக்கத் தடங்கள், சிறப்பு உதவித் தடங்கள் அனைத்திலும் கியூஆர் குறியீட்டு முறையைக் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16 முதல், துவாஸ் சோதனைச்சாவடியில் இந்த ஏற்பாடு தொடங்கும் என்று ஆணையம் புதன்கிழமை (டிசம்பர் 11) அறிவித்தது.
2025 ஜனவரி நடுப்பகுதிக்குள் இரு நிலவழிச் சோதனைச்சாவடிகளிலும் இந்த கியூஆர் குறியீட்டு முறையை நிறைவேற்ற ஆணையம் இலக்கு கொண்டுள்ளது.
வேறொரு நிலவரத்தில், டிசம்பர் 16 முதல் மரினா பே உல்லாசக் கப்பல் நிலையத்திற்கு வரும் அங்கிருந்து புறப்படும் சிங்கப்பூர்வாசிகள், கடப்பிதழைக் காட்டத் தேவையின்றி முக, கருவிழி அடையாளச் சோதனையைக் கொண்டு குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றலாம். சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் சிங்கப்பூர்வாசிகளாவர்.
வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது இவ்வாறு செய்யலாம்.
பேருந்து முனையங்களில் கியூஆர் குறியீட்டு முறை
“பேருந்து முனையங்களில் கியூஆர் குறியீட்டு முறையை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம், நிலவழிச் சோதனைச்சாவடிகளில் எல்லா வித போக்குவரத்து முறைக்கும் கடப்பிதழில்லா குடிநுழைவு நடைமுறையை ஆணையம் நிறைவுசெய்திருக்கும்,” என்றது ஆணையம்.
கடப்பிதழில்லா குடிநுழைவு நடைமுறை இருந்தாலும்கூட, செல்லவிருக்கும் நாடுகளில் குடிநுழைவு நடைமுறைக்கு கடப்பிதழ் தேவைப்படலாம் என்பதால் பயணிகள் அவற்றை எடுத்துச் செல்லுமாறும் ஆணையம் நினைவுபடுத்தியது. சரிபார்ப்புக்காக ஆணையத்திடம் சில பயணிகள் கடப்பிதழைக் காட்டவும் அவசியம் ஏற்படலாம்.
சக்கர நாற்காலிகளில் செல்வோர், நால்வர் வரை குடும்பமாகச் செல்வோர் உட்பட அனைத்து பேருந்துப் பயணிகளும் சோதனைச்சாவடிகளின் பேருந்துக் கூடங்களில் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறையாக சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்களும் வேறொரு கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைவோரும், குடிநுழைவு நடைமுறைக்காக தங்கள் கடப்பிதழைக் காட்ட வேண்டும். அடுத்தடுத்த பயணங்களின்போது கியூஆர் குறியீட்டைக் கொண்டு குடிநுழைவு முறையை அவர்கள் நிறைவேற்றலாம்.
மரினா பே உல்லாசக் கப்பல் நிலையத்திற்கும் நீட்டிப்பு
டிசம்பர் 16 முதல், மரினா பே உல்லாசக் கப்பல் நிலையத்தில் கடப்பிதழில்லா குடிநுழைவு முறையை ஆணையம் நீட்டிக்கும். பின்னர், கடல்வழிச் சோதனைச்சாவடிகளுக்கும் இது நீட்டிக்கப்படும்.
உல்லாசக் கப்பல் நிலையத்துக்கு வரும், அங்கிருந்து புறப்படும் சிங்கப்பூர்வாசிகள் தங்கள் முக, கருவிழி அடையாளச் சோதனையைக் கொண்டு குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றலாம். வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது அவ்வாறு செய்யலாம்.

